பறக்கும் படை பறந்து பறந்து பறிமுதல் செய்த ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’...புத்தக வெளியீட்டு விழாவுக்கும் தடை...

By Muthurama LingamFirst Published Apr 2, 2019, 4:33 PM IST
Highlights

நாட்டையே உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ரஃபேல் ஊழல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் சென்னையில் தடை விதிக்கப்பட்டது.
 

நாட்டையே உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ரஃபேல் ஊழல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் சென்னையில் தடை விதிக்கப்பட்டது.

‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது. ஃப்ரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான புத்தகம் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. விஜயன் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட இருந்தது. 

முன்னதாக, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று மாலை 6 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால், தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் வெளியீட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன் புத்தகத்தை வெளியிட, இந்து குழும தலைவர் என்.ராம் நூல் வெளியீட்டு சிறப்புரையாற்றவிருந்தார். அ.குமரசேன், இயக்குனர் ராஜூ முருகன், பத்திரிகையாளர் ஜெயராணி, புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜ் ஆகியோரும் இவ்விழாவில் உரையாற்றவிருந்தனர். 

இந்நிலையில், பூந்தல்லியில் இருந்து தேனாம்பேட்டை புத்தக கடைக்கு கொண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரபேல் புத்தகங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், புத்தகத்தை மீறி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இச்சம்பவத்தால் கொதித்துப்போயிருக்கும் எழுத்தாளர்கள் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கைக்கூலியாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டிவருகின்றனர்.
 

click me!