முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

By Manikandan S R SFirst Published Mar 24, 2020, 9:33 AM IST
Highlights

தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் சிக்கந்தர் பாஷாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் முதல்வர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்து இவர் ஏற்கனவே கைதாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருக்கும் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது விரைவில் வெடித்து விடும் என்று கூறி மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்தார். இதையடுத்து உஷாரான போலீசார் முதல்வர் வீட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.

அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். போலீசாரின் விசாரணையில் சென்னை மடிப்பாக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மடிப்பாக்கத்தில் இருக்கும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் குடிபோதையில் முதல்வரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் சிக்கந்தர் பாஷாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் முதல்வர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்து இவர் ஏற்கனவே கைதாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!