BJP Warning: சும்மா சும்மா கை வைத்தால் பொறுமையின் எல்லையை கடக்க நேரிடும்.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2021, 5:22 PM IST
Highlights

எந்த மாநிலத்திலாவது ட்விட்டர் பதிவுக்காக குண்டாஸ் போடப்பட்டு இருக்கிறதா என்று சொல்லுங்கள்? தமிழகத்தில் டிஜிபி கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை, தமிழக டிஜிபியை பொருத்தவரையில் சைக்கிளில் போவத,  செல்பி எடுப்பது, போட்டோ எடுப்பது போன்றவற்றில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். 

17 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறோம்.. சும்மா சும்மா கை வைத்தால் எங்கள் பொறுமையின் எல்லையைக் கடக்க வேண்டி வரும் என்றும், இது தமிழக அரசுக்கு தான் கொடுக்கும் எச்சரிக்கை என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சமீபத்தில் மோடி ஆதரவாளர் மாரிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்தே பாஜகவுக்கும் -திமுகவுக்கும் இடையேயான மோதல் இருந்து வருகிறது. திராவிட கட்சிகளை ஒழிப்பதே தங்களின் நோக்கமென பாஜக முழங்கினாலும், அதிமுகவை காட்டிலும் திமுக மீதான அதன் பகை என்பது முற்றிலும் வேறுபட்டாக உள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்துக்கு எதிராக திமுக வலுவாக இருப்பதாலேயே திமுகவை முதல் எதிரியாக பாஜக பாவித்து வருகிறது. அதனால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி  ஸ்டாலின், உதயநிதி வரை பாஜகவினர் திமுக எதிர்ப்பு நீள்கிறது. கடுமையான எதிர்ப்பைமீறி திமுக ஆட்சி கைப்பற்றியுள்ள நிலையில், அதின் மீதான பாஜகவின் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.  இதேபோல் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் முதல் திமுக எதிர்ப்பு என்பது தீவிரமடைந்துள்ளது என்றே சொல்லலாம். இது ஒருபுறமிருக்க பாஜக ஆதரவாளர்கள் எனக்  கூறிக்கொண்டு தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சிப்பவர்கள் எண்ணிக்கை சமூகவலைதளத்தில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் மோடி ஆதரவாளர் என கூறிக்கொள்ளும் மாரி தாஸ் என்பவர் தொடர்ந்து திமுகவுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதேபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கிஷோர் கே சாமி, கல்யாணராமன்  போன்றோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மாரிதாஸ்  மீது அதுபோன்ற எந்த கைது நடவடிக்கையும் காவல் துறை எடுக்கப்படாமல்  இருந்து வந்தது. அவருக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்தாலும் அவரைக் கைது செய்ய  அரசு தயக்கம் காட்டி வந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத் மற்றும் சக ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. 

இச்சம்பவத்தை மேற்கோள்காட்டி யூடியூபர் மாரிதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அந்த கருத்து தான் அவரின் இந்த அதிரடி கைதுக்கும் காரணமாக அமைந்துள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில், " திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், இங்கே எந்தப் பெரிய சதிவேலை நடப்பதற்கும் சாத்தியமுண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்ன பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது காஷ்மீரைப்போல தமிழகம் தீவிரவாத கூடாரமாக மாறி வருகிறதா என்ற தொனியில் அவரது இந்த பதிவு இருப்பதாக கூறி, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  இதேபோல முப்படைத் தளபதி இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்களின் தலையீடு இருப்பதாக சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பிய இன்னும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாரிதாசின் கைது நடவடிக்கை பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரிதாசின் கைது நடவடிக்கையை கண்டித்து பலரும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து கூறிவருகின்றனர். முன்னதாக அவரது கைதை கண்டித்து பாஜகவினர் மதுரையில் போராட்டம் நடத்தினர், இது குறித்து கருத்து தெரிவித்த கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுகவை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து குறிவைத்து கைது செய்யப்படுகிறார்கள். தமிழகம் காஷ்மீர் மாநிலத்தை போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் டுவிட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் மாரிதாஸ் அவர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. மாரிதாசை கைது செய்தவர்கள் ஏன் முப்படை தலைமைத் தளபதி மரணத்தை கொண்டாடியவர்களை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து  பேட்டி கொடுத்துள்ளார். இந்த வரிசையில் மாரிதாசின் கைது நடவடிக்கையை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாரிதாஸ் கைது  செய்யப்பட்ட செய்தியை கேட்டறிந்து அவரிடம் தொலைபேசி மூலம் உரையாடினேன், ஜனநாயகம் அளித்துள்ள கருத்துரிமை பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவை விமர்சித்தால் மட்டும் கைதா? இதுதான் தற்போதைய தமிழ்நாட்டின் அவலநிலை, ஒருபுறம் சமூகவலைதளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார்  செய்தவரும் திமுக இன்னொருபக்கம் தேசியவாதிகளை கைது செய்து வருகிறது என கூறியிருந்தார். இந்நிலையில்  மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாரதியார் படத்திற்கு மரியாதை செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ட்விட்டரில் கருத்து பதிவிட்டார் என்பதற்காக மாரிதாஸ் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் புகார் கொடுக்கலாம், இதுவரை இந்தியாவில் சைபர் குண்டாஸ் இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

எந்த மாநிலத்திலாவது ட்விட்டர் பதிவுக்காக குண்டாஸ் போடப்பட்டு இருக்கிறதா என்று சொல்லுங்கள்? தமிழகத்தில் டிஜிபி கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை, தமிழக டிஜிபியை பொருத்தவரையில் சைக்கிளில் போவத,  செல்பி எடுப்பது, போட்டோ எடுப்பது போன்றவற்றில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். ஆகவே ஆட்சியை நடத்துவது வேறு யாரோ, திமுகவுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு, தமிழகத்தில் வன்முறையாக கருத்து பதிவு செய்தால் அது குறித்து வேறு எந்த மாநிலத்திலும் புகார் கொடுக்கலாம், அந்த மாநில போலீசார் இங்கு இருப்பவர்களை வந்து கைது செய்ய முடியும். அதற்கான வழிவகைகள் சட்டத்தில் இருக்கிறது. அதனால் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது. இதை தமிழக காவல்துறையும், தமிழகத்தில் ஆட்சி செய்கிற திமுகவும் புரிந்து கொள்ள வேண்டும். 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம், சும்மா சும்மா கை வைத்தால் எங்கள் பொறுமையின் எல்லையை கடக்க வேண்டி வரும். இது தமிழக அரசுக்கு கொடுக்கும் எச்சரிக்கை என அவர் கூறியுள்ளார். 
 

click me!