
"கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி" என்ற பாடலை கொஞ்சம் ரிவர்ஸில் போட்டு "பிரித்தவனே சேர்த்து வைத்தாண்டி" என்று பாட தயாராக இருக்கிறது பாஜக.
அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக வெற்றி பெற்று விட்டது என்றாலும், திமுகவை தட்டி வைக்க, அதிமுக உடையக்கூடாது என்ற எண்ணம் தற்போது பாஜக வுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால், பிரிந்த இரு அணிகளையும் ஒன்று சேர்த்து, அதன் மூலம், தமது கூட்டணியை வலுவாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறது பாஜக.
அந்த திட்டத்திற்கு பன்னீர் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒத்துக்க கொண்டு விட்டனர். சசிகலா தரப்பில் அதை ஏற்றுக்கொண்டாலும், பன்னீருக்கு முக்கியத்துவம் அளிப்பதை அவர்கள் விரும்பவில்லை.
அதனால், சசிகலா குடும்பம் நீங்கலாக, அதிமுக அணிகளை ஒரே அணியாக இணைக்கும் திட்டத்தில் இருக்கிறது பாஜக.
அதற்காக, சசிகலா மேலும் சில ஆண்டுகள் சிறையில் இருந்து வெளிவராமல் இருக்கவும், தினகரனை உள்ளே அனுப்பவும் அனைத்து வழக்குகளும் தூசு தட்டி எடுக்கப்படுகின்றன.
அவ்வாறு இரு அணிகளும் ஒன்றினையும் பட்சத்தில், கட்சியிலும், ஆட்சியிலும் பன்னீரே முதன்மையானவராக இருப்பார். எடப்பாடி இரண்டாவது இடத்தில்தான் வைக்கப்படுவார்.
இது குறித்து, பாஜக தரப்பு, விரைவில் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதை ஏற்றுக்கொண்டால், வருமானவரி சோதனை மற்றும் வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இல்லையெனில், அவரும் சசிகலா பாணியில் உள்ளே செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
தற்போதைய தமிழக அமைச்சரவையில், தினகரன் ஆதரவு அமைச்சர்கள், எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், நடுநிலை அமைச்சர்கள் என்று மூன்று பிரிவாக உள்ளனர்.
ஆர்.கே.நகரில் தினகரனுக்கு உள்ள உண்மையான செல்வாக்கு என்ன? என்பதை அறிந்து கொண்ட அவர்கள், வெறுத்து போயுள்ளனர். அதனால், சசிகலா குடும்பம் அல்லாத அதிமுகவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்றே பாஜக நினைக்கிறது.
வரும் ஜூலை மாதம் குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த கையோடு, அதிமுகவை ஒருங்கிணைக்கும் திட்டத்தை, பாஜக கையில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் பலன் அளிக்காத பட்சத்தில், ஆட்சி கலைப்பை தவிர வேறு வழியில்லை என்றே பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.