மண்டைய பிய்ச்சுக்கும் பா.ஜ.க! கண்டுக்கவே கண்டுக்காத தமிழ்நாடு: அவரா, இவரா? எவராயிருந்த எனக்கென்ன!

By Vishnu PriyaFirst Published Sep 3, 2019, 4:21 PM IST
Highlights

தமிழக மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறார்கள். காரணம்? தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன்  தெலுங்கானாவின் கவர்னர் ஆகிவிட்டதால்தான். ”இனி பத்து நிமிஷத்துக்கு ஒரு அசால்ட் பேட்டி, பதினோறு நிமிஷத்துக்கு ஒரு அதிரடி அறிக்கைன்னு யார் கொடுத்து எங்களை வாழ வைக்கப் போறாங்க? வெற்றிகரமான தோல்வி! தோல்விகரமான வெற்றி! 

தமிழக மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறார்கள். காரணம்? தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன்  தெலுங்கானாவின் கவர்னர் ஆகிவிட்டதால்தான். ”இனி பத்து நிமிஷத்துக்கு ஒரு அசால்ட் பேட்டி, பதினோறு நிமிஷத்துக்கு ஒரு அதிரடி அறிக்கைன்னு யார் கொடுத்து எங்களை வாழ வைக்கப் போறாங்க? வெற்றிகரமான தோல்வி! தோல்விகரமான வெற்றி! அப்படின்னெல்லாம் யார் இனி பொலிடிகல் பஞ்ச் டயலாக்குகளை பற்ற வைக்கப் போறாங்க?” என்று ஹோவென அழுது வடிகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்களை.

 இந்த சோகம் ஒரு புறம் இருக்க, தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார்? இதுதான் மிகப்பெரிய கேள்வியாக அரசியலரங்கில் தொக்கி நிற்கிறது. ஒரு கட்சியின் தேசிய அளவிலான பொறுப்புகளில் எந்த மாநிலத்தை சேர்ந்தவரையும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் மாநில பதவியில், அம்மாநிலத்தை சேர்ந்தவர் இருந்தால்தான் அம்மண்ணின் அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சியை வழி நடத்திட முடியும். எனவே தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஒருவரைத்தான் நியமித்தாக வேண்டியது அவசியம்.

 யாரை நியமிப்பது? என்று பா.ஜ.க.வின் தேசிய தலைமை ஏற்கனவே முடிவெடுத்து வைத்துவிட்டுதான் தமிழிசைக்கு ப்ரமோஷனை கொடுத்திருக்கிறது. ஆனாலும் கூட மாநில தலைவர் பதவியை பிடிப்பதில்  பெரும் போட்டிகளும், ஹேஸ்யங்களும் அதிரடித்து அலைபாய்கின்றன. 

பொன்னாரா? சி.பி.ஆரா? வானதியா? ஹெச்.ராஜாவா? கறுப்பு முருகானந்தமா? நயினார் நாகேந்திரனா? என்றெல்லாம் தாறுமாறாக தகவல்கள் தடதடக்கின்றன.

 பொன்னார் பா.ஜ.க.வின் கடந்த ஆட்சியிலேயே மத்திய அமைச்சராக இருந்தவர். எனவே மீண்டும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருக்காது. சி.பி.ஆரும் கடந்த ஆட்சியின் போது தேசிய கயிறு வாரிய தலைவராக இருந்தார். வானதியை நியமிக்கலாமென்றால், இதுவரையில் தமிழிசைதான் தலைவராக இருந்திருக்கிறார். எனவே மீண்டும் ஒரு பெண்ணா? என்பது சிக்கலாகிறது.

 ஹெச்.ராஜாவை நியமிக்கலாமென்றால், கட்சியை காப்பாற்றும் நோக்கில் தனது துடுக்குத்தனமான பேச்சினால் தமிழகம் முழுக்க அதிருப்தியை சம்பாதித்து வைத்திருப்பவர். எனவே அவரை நியமித்தால் ஏற்கனவே வறுபடும் பா.ஜ.க., இனி வதைபட துவங்கிடும். 
அ.தி.மு.க.விலிருந்து சமீபத்தில் பிரிந்து வந்து பா.ஜ.க.வில் இணைந்த நயினார் நாகேந்திரனை நியமிக்கலாமென்றால் அவரிடம் திராவிடத்தனமே அதிகம் இருக்கிறது. தேசிய மற்றும் இந்து வர்ணம் கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு இது செட் ஆகாது.

 இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில், மாநில துணை தலைவரான குப்புராமை மாநில தலைவராக்கிவிட்டனர் என்று தகவலை பரப்புகின்றனர். ஆக இப்படியாக அலசல்கள், விவாதங்கள், முயற்சிகள் போய்க் கொண்டே இருக்கின்றன.

 தமிழகத்தில் எவ்வளவு முயன்றும் பா.ஜ.க.வை காலூன்ற செய்ய முடியவில்லை என்பதால், அடுத்து நியமிக்கப்படும் தலைவர் எல்லா வகையிலும் சிறப்பானவராக இருக்க வேண்டும் என்பதே அக்கட்சி தலைமையின் விருப்பம். ஆனால் தமிழகமோ ’மோடி, அமித்ஷாவே இங்கே தலைவரானாலும் தாமரையை இங்கே மலர விடமாட்டோம், விடவே மாட்டோம்!’ என்பதில் குறியாய் இருப்பதாகவும், நீங்க யாரை வேணும்னாலும் தலைவராக்கிக்கோங்க, எங்களுக்குப் பிரச்னை இல்லை! என்று அலட்சியமாக இருப்பதாகவும் உளவு தகவல்கள் டெல்லிக்கே பறந்திருக்கின்றனவாம். 
ஆஹாங்!

click me!