எம்ஜிஆர் நினைவிடத்தில் பாஜக அஞ்சலி.. புரட்சித் தலைவர் மீது அரசியல் கட்சிகளுக்கு வந்த புது பாசம். காரணம் இதோ.!

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2020, 11:51 AM IST
Highlights

எம்ஜியாரை உரிமை கொண்டாடும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டு வருகின்றன. கட்சி தொடங்கிய உடன் கருப்பு எம்ஜிஆர் என்ற கோஷத்துடன் அரசியல் களத்தில் குதித்தார் விஜயகாந்த். அவர் மக்கள் ஆதரவுடன் எதிர்கட்சி தலைவர் வரை உயர்ந்தார் என்பதே அதற்கு சான்று. 

எம்ஜிஆர்  நினைவு நாளான இன்று முதல் முறையாக தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். இன்று பகல் 12 மணியளவில்  எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அவர் வரஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதற்கான ஆலோசனைகள் மற்றும் அதற்கான காய்நகர்த்தல்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

 

வழக்கம் போல திமுக-அதிமுக இடையே போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தை மேலும் வெப்பமடையச் செய்துள்ளது. இந்நிலையில் எந்தவகையிலேனும் மக்களை கவர்ந்து வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என பல்வேறு வியூகங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் மறைந்து கால் நூற்றாண்டு கடந்தும் இன்றும் மக்கள் மனதில் மங்காத புகழ்பெற்று, ஏகோபித்த மக்கள் சொல்வாக்கு மிக்க தலைவரான இருந்து வரும் புரட்சித்தலைவர் எம்ஜியாரை உரிமை கொண்டாடும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டு வருகின்றன. கட்சி தொடங்கியவுடன் கருப்பு எம்ஜிஆர் என்ற கோஷத்துடன் அரசியல் களத்தில் குதித்தார் விஜயகாந்த். அவர் மக்கள் ஆதரவுடன் எதிர்கட்சி தலைவர் வரை உயர்ந்தார் என்பதே அதற்கு சான்று. 

 

இதுவரை எம்ஜிஆரின் புகைப்படத்தை அதிமுக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் கட்சி துவங்கிய கமல்ஹாசன் முதல் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தர போராடிய காங்கிரஸ் கட்சி வரை  இன்று தங்கள் கட்சி பேனர்களில் எம்ஜிஆரின் புகைப்படத்தை பயன்படுத்த துவங்கியுள்ளன. தமிழக பாஜகவும் தன் பங்குக்கு எம்ஜிஆரின் புகைப்படத்தை பயன்படுத்துவதுடன், ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆரின் ஆட்சியை கொடுப்போம் என தெருவுக்குத் தொரு பிரச்சாரம் செய்து வருகிறது. இதில், புது விதமாக நடிகர் கமலஹாசனும் காங்கிரஸ் கட்சியும் எம்ஜிஆருக்கு உரிமை கொண்டாடுவதை அதிமுக மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறது. எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்கக் கூட நடிகர் கமலஹாசனுக்கு தகுதி இல்லை என அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் 

அதன் கூட்டணி கட்சியான பாஜக எப்போதும் இல்லாத வகையில், முதல் முறையாக எம்ஜிஆரின் நினைவிடத்துக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளது. பகல் 12 மணி அளவில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என பாஜக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பு பின்வருமாறு: இன்று தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு எம்ஜிஆர் சமாதியில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல் முருகன் அவர்கள் இன்று (24.12.2020) வியாழக்கிழமை மதியம் 12 மணி அளவில் முன்னாள் முதல்வர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். 

மற்றும் இரண்டாவது நிகழ்ச்சியாக தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில்  மதியம் ஒரு  1 மணி அளவில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல் முருகன் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்ஜி ராமச்சந்திரன் நினைவஞ்சலி முன்னிட்டு அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார். அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைக்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!