பரபரப்பு...அதிமுகவை காலி செய்யும் பாஜக..! கட்சி மாறும் முன்னாள் எம்.எல்.ஏக்கள்...

By Ganesh RamachandranFirst Published Nov 24, 2021, 2:36 PM IST
Highlights

கூட்டணி தர்மத்தை பாஜக மறந்துவிட்டதா? என்று அதிமுகவினர் குமுறும் விதத்தில் இரண்டு முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுக தலைவர்களை தங்கள் கட்சிக்கு தூக்கியுள்ளது பாஜக.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் உங்கள் கட்சியையே கரைத்துவிடுவார்கள் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பலரும் சமூக வலைதளங்களிலும், ஊடக பேட்டிகளிலும் அதிமுகவை எச்சரித்தார்கள். அது நடந்தே விட்டதோ என்று எண்ணத்தோன்றும் தரமான சம்பவம் இன்று திருப்பூரில் அரங்கேறியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் குஷ்பு ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சியினர் பலரும் பாஜகவில் இணையும் விழா இன்று திருப்பூரில் நடைபெற்றது.

காரைக்குடி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சோழன் பழனிசாமி

அங்கு வந்திருந்த பாஜக தொண்டர்களுக்கும், செய்தியாளர்களுக்குமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட மூன்று அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் மறைமுக யுத்தம், சசிகலா கட்சியைக் கைபற்ற முயற்சி என்று ஏற்கனவே அதிமுக பலவீனப்பட்டுக் கொண்டே போகிறது. இதில் கூடவே நட்பாக கூட்டணியில் உள்ள பாஜகவும் தன் பங்கிற்கு பலவீனப்படுத்துகிறதா? என்று கேள்வி எழுப்பும் விதத்தில் இது அமைந்திருந்தது. அதிமுகவின் மாவட்ட சிவகங்கை முன்னாள் செயலாளரும், முன்னாள் காரைக்குடி எம்.எல்.ஏவுமான சோழன் சி.டி பழனிசாமி மற்றும் சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோரை பாஜக கொடி தாங்கிய துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார் அண்ணாமலை. அதே போல சென்னை புறநகர் மாவட்ட அதிமுக IT Wing தலைவர் பிரவீன் குமாரும் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்

ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக பாஜக இன்னும் கூறவில்லை. தேர்தல் அறிவிக்கட்டும் கூட்டணி பற்றி சொல்கிறோம் என்கிறார் அண்ணாமலை. அதே போல கோவையில் மேயர் பதவியை கைப்பற்ற பாஜக அதிமுகவை ஓவர்டேக் செய்யும் முயற்சிகள் நடப்பதாக அங்கு கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இன்னிலையில் கூட்டணிக்குள் இருந்தே அதிமுகவை பலவீனப்படுத்தும் பாஜக முயற்ச்சிகள் எங்கு போய் முடியுமோ என்று புலம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள்...

click me!