
அதிமுக, திமுகவை உடைப்பதில்தான் பாஜக மேலிடம் கவனம் செலுத்தி வருவதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், ஓசை படாமல் வன்னியர் சங்கம் மற்றும் பாமக வில் உள்ள வன்னியர்களை குறி வைத்து இழுக்க தொடங்கி உள்ளது பாஜக.
முதல் கட்டமாக, வன்னியர் சங்கத்தில் ஆக்டிவாக இருந்த இளைஞர்கள் பலரை, தம் பக்கம் இழுத்த பாஜக, தற்போது, பாமக முன்னாள் எம்.எல்.ஏ கே.வி.ராமநாதனை இழுத்துள்ளது.
இன்னும் சில நாட்களில், பாமகவின் முக்கிய பொறுப்பில் உள்ள பலர் பாஜக வுடன் ஐக்கியமாவார்கள் என்று, பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் ஒற்றை பெரும்பான்மை சமூகமான வன்னியர்களை, திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள், வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.
வன்னியர் சமூக முன்னேற்றத்திற்கு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அதை அடிப்படை பிரச்சாரமாக முன்வைத்து, வன்னியர் சங்கத்தை தொடங்கி, போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வளர்த்து, பாமக என்ற ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கினார் ராமதாஸ்.
ராமதாஸின் கடந்த 30 ஆண்டு கால அரசியலில், எம்.பி, எம்.எல்.ஏ க்கள், மத்திய அமைச்சர்கள் வந்தாலும், வன்னியர் சமூக முன்னேற்றம் என்பது, இன்னும் கேள்வி குறியாகவே உள்ளது.
அத்துடன், ராமதாசும், ஒட்டு மொத்த கட்சியை, தமது குடும்ப சொத்தாக மாற்றி, தமது மகன் அன்புமணி ராமதாசுவிடம் ஒப்படைத்து விட்டார். இது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருந்தாலும், தங்கள் சமூகத்திற்கென்று ஒரு தலைவர் இருக்கட்டும் என்று பலரும் அமைதி காத்தனர். ஆனாலும், அதற்கு மறைமுகமாக வலுவான எதிர்ப்பும் உள்ளுக்குள் புகைந்து கொண்டே இருந்தது.
ராமதாசுக்கு பிடிக்காதவர்கள், ராமதாஸை பிடிக்காதவர்கள் என இருந்தவர்கள், தங்களுக்கு சரியான மாற்று இல்லாமல் தவித்து கொண்டிருந்தனர்.
ராமதாஸை தேவை இல்லாமல் பகைத்து கொள்ள வேண்டாம் என்று, அவருடைய அதிருப்தியாளர்களை திமுக, அதிமுகவும் அரவணைக்காமலே இருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் தாம் காலூன்ற ஒரு வலுவான சமூகம் தேவை என்பதை உணர்ந்த பாஜக, வன்னியர் சங்கம் மற்றும் பாமக வை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை குறி வைத்து காய் நகர்த்த ஆரம்பித்தது.
அதன் முதல் கட்டமாக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் இழுக்கப்பட்டு விட்டனர். தற்போது, பாமக வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குறிவைத்து இழுக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் முதல் கட்டமாக, பவானி தொகுதியின் முன்னாள் பாமக எம்.எல்.ஏ கே.வி.ராமநாதன், பாஜகவில் இனைந்து விட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸில் வன்னிய இளைஞர்கள் சேர்வதை தடுக்க, ராமதாஸ் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற போதிலும், அது பெரிய அளவில் பலன் தரவில்லை என்றே கூறப்படுகிறது.
மறுபக்கம், பாஜக வை எதிர்த்தால், தமது மகன் அன்புமணி மீதான வழக்குகள் தூசு தட்டப்படும் என்பதால், கலங்கி போயிருக்கிறது ராமதாஸ் வட்டாரம்.