
திங்கள் அன்று துவங்கிய இந்த வார பரபரப்பு, நடிகர் சந்தானம் பாஜக.,வின் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த்தின் மூக்கில் குத்தி ரத்தம் வர வைத்து அறுவை சிகிச்சை செய்யுமளவுக்குக் கொண்டு சென்றதுதான்!
ரியல் எஸ்டேட் தொழில் தகராறு தொடர்பில் ‘தொழில் பார்ட்னர்’ சண்முகசுந்தரத்தை மிரட்டப் போன இடத்தில், அங்கே இருந்த பாஜக., வழக்கறிஞர் பிரேம் ஆனந்தை தாக்கி காயப் படுத்தி, இப்போது கவலையில் இருக்கிறார் சந்தானம். பேசப் போன இடத்தில் கை நீட்டியதில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, தான் கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருக்கிறார் சந்தானம்.
இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட போது, தான் ஒரு பாஜக., பிரமுகர் என்றும், சண்முக சுந்தரத்தின் சட்ட ஆலோசகர் என்றும் கூறியுள்ளார் பிரேம் ஆனந்த். அதற்கு சந்தானம், “பிஜேபி.,ன்னா என்ன பெரிய... ன்னு நெனப்பா! எனக்கு ஸ்டாலினே தெரியும்டா” என்று கோபாவேசத்தில் கூறப்போக, அது அரசியல் ரீதியான எதிர்ப்புகளை சந்தானத்துக்கு இப்போது தோற்றுவித்திருக்கிறது. பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு கண்டனம் தெரிவித்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட இந்து மக்கள் கட்சி உடனே எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டது. இப்போது பாஜக.,வும் தன் பங்குக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் வேலையைச் செய்திருக்கிறது.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பாஜக., சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த கண்டன போஸ்டர்களில் ஒரு சுவாரஸ்யம், சந்தானத்தை சந்தானமாக தேட வைத்திருப்பதுதான்! போஸ்டர்களில் வழக்கமான பாஜக., பிரமுகர்கள் முகங்கள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, தலைவர் அமித் ஷா, தமிழக தலைவர் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, சிபிஆர்., என பலரின் முகங்கள் சிறிதாகத் தெரிய... கூடவே மூக்கில் அடிபட்டு பரிதாபமாகக் காட்சி அளிக்கும் பிரேம் ஆனந்த் படமும், அவர் சிகிச்சை எடுக்கும் படமும் தெரிய... முக்கிய கேரக்டரான சந்தானத்தை தேடினால்... ஏதோ பெரிய அளவில் பெண் படம்தான் பளிச்சிடுகிறது.
கொஞ்சம் நின்று பார்த்தால்தான், சந்தானம் பெண் வேடத்தில் நடித்த சினிமா ஸ்டில் என்று தெரிகிறது. அதில், பெண் வேட சந்தானம் கொஞ்சம் ரொமான்ஸாகவே ஒரு லுக் விடும் படம், இந்த கண்டன போஸ்டரில் உள்ளது. இந்த போஸ்டர் படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த நெட்டிசன்கள், இதன் மூலம் பாஜக.,வினர் என்ன சொல்ல வருகிறார்கள்? இந்தச் செயலில் ஈடுபட்டவர் ஒரு ஆண் இல்லை...என்று கூறுகிறார்களா அல்லது, பிரேம் ஆனந்த் சந்தானம் என்ற பெண் கையால் அடி வாங்கினார் என்று காட்ட முயலுகிறார்களா என்று கன்ப்யூஸ் ஆகி கேலி செய்து வருகின்றனர்!