செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தியது எல்லாம் ஒரு சாதனையா? என கேள்வி எழுப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு காயினை நகர்த்த முதல்வருக்கு தெரியுமா? எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக மீது புகார் கூறும் பாஜக
தமிழகத்தில் பாஜக- திமுக இடையே கடும் மோதல் கடந்த சில மாதங்களாக நீடித்து வருகிறது. அந்த அளவிற்கு திமுக மீது தினந்தோறும் எதாவது புகாரை பாஜக தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் தமிழக பாஜக சார்பாக மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். திமுக ஆட்சியில் கஜானா காலியாக உள்ளதாக தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2020ம் ஆண்டு கனிம வளம் மூலம் 1,303 கோடி வருவாய் வந்த நிலையில் நடப்பு ஆண்டில் 1,179 கோடி மட்டுமே கனிம வளத்தின் மூலம் அரசுக்கு வருவாய் வந்துள்ளதாக தெரிவித்தார். கனிம வளம் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டிய நிலையில் தற்போது குறைந்துள்ளதாக குற்ப்பிட்டார். கனிம வளத்தில் திமுகவினர் கொள்ளையடித்து வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி எடுக்கிறார் அதற்க்கு அடுத்த தினமே ஆகஸ்ட் 14ம் தேதி ஒரே நாளில், டாஸ்மாக் மூலம் ரூ.250 கோடி இந்த அரசு வருமானம் ஈட்டியுள்ளதாக விமர்சித்தார். திமுக அரசு வருமானத்திற்கு டாஸ்மாக்கை மட்டுமே நம்பியுள்ளதாகவும், திமுகவை சேர்ந்த எம்.பி.கள் யாரும் மது ஆலைகள் நடத்தவில்லை. அதன் மூலம் வருமானம் வரவில்லை என்று சொல்ல முடியுமா என சவால் விடுத்தார்.
திரைப்பட ட்ரைலர் வெளியிடும் ஸ்டாலின்
லஞ்சம், ஊழல் ,கொலை, கூட்டு பாலியில் செய்வதில் தான் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை கூட தமிழகத்தில் செயல்படுத்த வெள்ளையர்கள் ஆட்சி காலத்தை போல் இங்கு உள்ளவர்களுக்கு கமிஷனாக கப்பம் கட்ட வேண்டியுள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் பொன்னியின் செல்வன், அந்தப் படத்தின் டிரைலரை யார் வெளியிடுகிறார்கள் என தெரியுமா? தமிழக முதலமைச்சர்தான் பொன்னியின் செல்வன் திரைப்பட ட்ரெய்லரை அடுத்த வாரம் வெளியிட உள்ளார். இந்தியாவில் ஏதாவது ஒரு மாநில முதலமைச்சர் ஒரு படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவிற்கு சென்றுள்ளார்களா? அடுத்து நமது முதல்வர் முதல் நாள் முதல் ஷோவிற்கு செல்வார், இதனை தொடர்ந்து முதலமைச்சர் அடுத்து வர உள்ள படத்திற்கு கட்டவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யவும் உள்ளதாக விமர்சித்தார். எனவே இது முதலமைச்சருக்கு தெரியும் கட்சி தான் குடும்பம் குடும்பம் தான் கட்சி அந்த இரண்டையும் இணைப்பது சினிமா என்பது முதலமைச்சர் புரிந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முதல்வர் சாதனை படைத்துவிட்டதாக சொல்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு காயினை நகர்த்த தெரியுமா? செஸ் ஒலிம்பியாட் நடத்தியது எல்லாம் ஒரு சாதனையா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.