தமிழகத்திற்கு எப்போது சட்டமன்ற தேர்தல்..? பாஜக மூத்த தலைவரின் ஆருடத்தால் ஆட்சியாளர்கள் அதிர்ச்சி

First Published Jun 12, 2018, 1:01 PM IST
Highlights
bjp senior leader ganesan guess about tamilnadu assembly election


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய பாஜக அரசிற்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசின் தயவுடன் தமிழகத்தில் ஆட்சி நீடிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசிற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் கிடையாது என தமிழக ஆட்சியாளர்கள்  தெரிவித்து வருகின்றனர். 

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும், தமிழக அரசியலில் சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எஞ்சிய மூன்றாண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக முடிப்போம் என ஆட்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்திருக்கும் ஒரு கருத்து, சட்டமன்ற தேர்தலுக்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நான்காண்டு கால சாதனைகள் குறித்த தொண்டர்கள் மற்றும் ஆர்வலர்களுடனான சந்திப்பு மதுரை காளவாசலில் நடைபெற்றது.

அதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன், தமிழக அரசை கலைக்கும் நோக்கம் பாஜகவிற்கு இல்லை. எனினும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடத்தப்படலாம். தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என இல.கணேசன் தெரிவித்தார். 

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படலாம் என இல.கணேசன் கூறியிருப்பது, தமிழக ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
 

click me!