மோடி மீண்டும் பிரதமராக காய் நகர்த்தும் பாஜக... புதிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க முயற்சி!

By Asianet TamilFirst Published May 11, 2019, 8:27 AM IST
Highlights

தற்போதைய நிலையில் எந்த அணியிலும் சேர ஆர்வம் காட்டாமல் இருக்கும் ஒடிசாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தை பாஜக கூட்டணியில் சேர்க்க பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மோடி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுவரும் நிலையில், ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை பாஜக தலைவர்கள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்களைத் தாண்டி பாஜக மட்டும் தனித்து 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியோடு சேர்த்து 336 தொகுதிகள் வரை பாஜக வெற்றியை ருசித்தது. ஆனால், இந்த முறை பாஜக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 272 சீட்டுகளைப் பிடிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பாஜக தலைவர்களே சந்தேகத்தில் இருக்கிறார்கள். பாஜக கூட்டணி மெஜாரிட்டி பெறுவதில் சிக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 
அதின் எதிரொலியாகவே அக்கட்சியின் பொதுச் செயலர் ராம் மாதவ், “இந்த முறை பாஜக கூட்டணி 271 இடங்களைப் பிடித்தாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான். கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்” என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், சில மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை பாஜக கூட்டணிக்குள் கொண்டும் வரும் முயற்சிகளை பாஜக தலைவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.


தற்போதைய நிலையில் எந்த அணியிலும் சேர ஆர்வம் காட்டாமல் இருக்கும் ஒடிசாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தை பாஜக கூட்டணியில் சேர்க்க பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'போனி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மிகச் சிறப்பாக எதிர்கொண்டதாக மோடி பாராட்டி பேசியது அந்த அடிப்படையில்தான் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீதும் பாஜக தலைவர்கள் பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள் என்று டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகின்றன. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சியின் ஆதரவை பெறும் முயற்சியிலும் பாஜக ஈடுபடும் என அக்கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

click me!