ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசு எங்கே என போஸ்டர் ஒட்டிய பாஜக.. ரூ.15 லட்சம் எங்கே என பதில் போஸ்டர் ஒட்டிய திமுக.!

By Asianet TamilFirst Published Jan 15, 2022, 10:23 PM IST
Highlights

 மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநில தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். இப்போது பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த கல்வி உதவித் தொகை என்னானது என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசு தொகை என்று கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டிய பாஜகவுக்கு, ரூ.15 லட்சம் எங்கே என்று போஸ்டர் ஒட்டி திமுக பதிலடி கொடுத்திருக்கிறது.

பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் பரிசு தொகுப்போடு 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டில் ரூ.1000, 2021-ஆம் ஆண்டில் ரூ.2500-ஐ அதிமுக அரசு வழங்கியது. இது தேர்தலுக்காக வழங்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் 2020-இல் கொரோனா தொடங்கியது முதலே ரூ.5000 வழங்க வேண்டும் என்று திமுக கோரி வந்தது. ஆனால், அதிமுக அரசு ரூ.1000 மட்டும் வழங்கியதால், திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.4000 வழங்கப்படும் என்று அக்கட்சி  தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் மே, ஜூன் மாதங்களில் இரு தவணைகளாக ரூ.4000 வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொங்கல்  திருநாளையொட்டி திமுக அரசு ரொக்கப் பரிசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடத்தில் இருந்தது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பை மட்டும் திமுக அரசு அறிவித்தது. இதனால், பொதுமக்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். ஆனால், அதிமுகவினர், “தங்கள் ஆட்சியில்  ரூ.2500 வழங்கியபோது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுகவினர் கோரினர். அதன்படி இந்தப் பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்றும் திமுக அரசு ஏமாற்றுவதாகவும்” விமர்சித்தனர். இதேபோல் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவும் அன்று ரூ.5000 வழங்கவில்லை என்று திமுக அரசை விமர்சித்தனர். மேலும் பொங்கல் பரிசில் புளியில் பல்லி இருந்ததாகவும், வெல்லம் உருகுகிறது என்றும் அதிமுக, பாஜக திமுக அரசை விமர்சித்தன. 

மேலும் இந்தப் பொருட்கள்  எங்கு கொள்முதல் செய்யப்பட்டன என்றும் இக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் பாஜக செல்வாக்காக உள்ள கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் பொங்கல் பரிசு கேட்டு போஸ்டர் அடித்து ஒட்டினர். மூலை முடுக்குகளில்கூட இந்த போஸ்டரை ஒட்டியுள்ள பாஜகவினர், அதில், “‘தமிழக மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசே, பொங்கல் பரிசு ரூபாய் 5000 எங்கே?’ என கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவினர் ஒட்டிய இந்த போஸ்டர் திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட திமுகவினர் பாஜகவுக்கு போஸ்டர் மூலமே பதிலடிக் கொடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகர திமுக சார்பில், ‘ஒன்றிய பாஜக அரசே, தேர்தலின் போது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் எனச் சொன்னது என்னாச்சு?’ என போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநில தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். இப்போது பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த கல்வி உதவித் தொகை என்னானது என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், கன்னியாகுமரியில் திமுக - பாஜக இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியிருக்கிறது.

click me!