Rajendra Balaji : விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராகும் ராஜேந்திர பாலாஜி... சைலண்டாக மனு கொடுத்த மாஜி அமைச்சர்..!

By Asianet TamilFirst Published Jan 15, 2022, 9:01 PM IST
Highlights

போலீஸுக்கு ராஜேந்திர பாலாஜி தண்ணி காட்டிய இந்த விவகாரத்தில், நீண்ட தேடுதல் முயற்சிக்குப் பிறகு கடந்த 5-ஆம் தேதி கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழகம் கொண்டு வந்த அவரை, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமினால் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பு, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக விசாரணை அதிகாரியிடம் மனு அளித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அமைச்சரவையில் இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகார்கள் கிளம்பின. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தக்கால் செய்திருந்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸ் தனிப்படைகள் உருவாக்கப்பட்டன. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

போலீஸுக்கு ராஜேந்திர பாலாஜி தண்ணி காட்டிய இந்த விவகாரத்தில், நீண்ட தேடுதல் முயற்சிக்குப் பிறகு கடந்த 5-ஆம் தேதி கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழகம் கொண்டு வந்த அவரை, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். திருச்சியில் அவர் சிறையில் இருந்தபோது, அவரைச் சந்திக்க அதிமுக நிர்வாகிகள் பலரும் முயற்சி செய்தனர். ஆனால், ராஜேந்திர பாலாஜி சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்திருந்த ஜாமின் தொடர்பான மனுவில், அவருக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையத்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திர பாலாஜியை வரவேற்க அதிமுக நிர்வாகிகளும் ஆதரவாளர்கள் திருச்சிக்கு வந்தனர். ஆனால், அப்போதும் யாரையும் சந்திக்காமல் உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சொந்த ஊருக்கு ராஜேந்திர பாலாஜி சென்றுவிட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தனக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் விசாரணை அதிகாரியிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

click me!