தமிழகத்திற்கான பாஜகவின் பிரத்யேக திட்டங்கள்..! புட்டுப்புட்டு வைத்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி

By karthikeyan VFirst Published Oct 9, 2020, 3:48 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் காலூன்ற தீவிரமாக முயற்சித்துவரும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும் தென்மாநிலங்களின் பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி ஏசியாநெட் ஆங்கிலம்(Asianet Newsable) இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழக அரசியல் களத்தில் பாஜக குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை பார்ப்போம்.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் காலூன்ற தீவிரமாக முயற்சித்துவரும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும் தென்மாநிலங்களின் பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி ஏசியாநெட் ஆங்கிலம்(Asianet Newsable) இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழக அரசியல் களத்தில் பாஜக குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை பார்ப்போம்.

கேள்வி: தென்மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளராக உங்களுக்கு மிகப்பெரும் சவால் இருக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு எந்த மாதிரி பணிகளை முன்னெடுக்கப் போகிறீர்கள்? உங்களது திட்டம் என்ன..?

சி.டி.ரவி: எங்களது நீண்டகால திட்டம் பாஜக எல்லா பகுதிகளிலும் கோலோச்சுவதுதான்.  தேசம் முழுவதும் பரந்து விரிந்து எங்கும் நிறைந்த கட்சியாக பாஜக இருக்கவேண்டும். அனைத்து பிரிவு மக்களிடமும் பாஜக சென்றடைய வேண்டும். பாஜகவிற்கு சமூக, அரசியல் தீண்டாமையில் நம்பிக்கையில் இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவிலும் கூட பாஜக வளர வேண்டியிருக்கிறது. இந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக வளர்ச்சியடைய, மிகச்சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டியிருப்பதுடன், அந்த திட்டங்களை கட்சியினர் அனைவரும் இணைந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டியிருக்கிறது. கட்சியில் நமக்கான பொறுப்புகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் குழுவாக இணைந்து பணியாற்றுவதே முக்கியம்.

கேள்வி: தமிழக மக்கள், பாஜக தமிழகத்தில் இந்தியை திணிப்பதாகவும், அதனால் பாஜக தமிழகத்திற்கு எதிரான கட்சி என்றும் விமர்சிக்கிறார்கள். எப்படி தமிழக வாக்காளர்களை கவரப்போகிறீர்கள்?

ரவி: ஒவ்வொரு மாநில மக்களின் நலனையும் விருப்பத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். அதேவேளையில் தேசத்தின் நலனும் முக்கியம். பாஜக தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்யும் கட்சி. ஆனால் அதேவேளையில், பிராந்திய மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளோம்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையில், அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தேசிய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது; அவ்வளவுதான். அதனால் மாநில மொழிகளை புறக்கணிக்கிறோம் என்ற குற்றச்சாட்டை சொல்லமுடியாது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அந்தந்த மாநில மொழிகளின் பெருமையுள்ளது. ஆனால் அனைவரும் இந்தியர்கள் என்பதை மனதில்வைத்து செயல்பட வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கென பிரத்யேக திட்டம் எதுவும் வைத்துள்ளீர்களா..?

ரவி: அடுத்த வாரம் ஒரு கூட்டம் இருக்கிறது. அதில், தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து கேட்டறியப்படும். அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து, அவற்றில் எவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எங்களது பலங்கள் மற்றும் பலவீனங்களையும் மதிப்பீடு செய்து முடிவு எடுப்போம்.

கேள்வி: மேற்கு வங்க மாதிரியை பாஜக தமிழகத்திலும் பின்பற்றுகிறதா..? பாபுல் சுப்ரியோ மேற்கு வங்கத்தில் செய்ததை போன்று, தமிழகத்தில் இளைஞர்களை கவர்வதற்காகத்தான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் முன்னிறுத்தப்படுகிறார்களா..?

ரவி: அப்படியெல்லாம் இல்லை.. அண்ணாமலை(கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி) சிறப்பாக செயல்படுகிறார்; இளைஞர்களை கவர்கிறார். அவருக்கு பாஜகவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பாஜகவின் வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்த வாய்ப்புகளை பயன்படுத்துகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் பாஜக இன்னும் காலூன்றவில்லை; இன்னும் கூட்டணியில் தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில், பாஜகவின் நிரந்தர கூட்டணி கட்சி அதிமுக தானா? அல்லது திமுகவுடனான கூட்டணி குறித்தும் பரிசீலிக்கிறீர்களா? 

ரவி: கர்நாடகாவிலும் பாஜகவிற்கு இதேபோன்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. கர்நாடக மக்கள் ஜனதா தளத்திற்கும் காங்கிரஸுக்கும் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் நிலைமை மாறி, இப்போது பாஜகவிற்கு ஆதரவளிக்கிறார்கள். அதேபோன்ற நிலை தமிழகத்திலும் வரும். நாங்கள் எங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளும் பட்சத்தில், பலன்களை அறுவடை செய்ய முடியும். தேசத்தின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பாஜக, கூட்டணி கதவை திறந்தே வைத்திருக்கிறது. திறந்த சிந்தனையுடன், கூட்டணிக்கான வாய்ப்புகளையும் திறந்தே வைத்திருக்கிறோம்.

கேள்வி: தமிழக அரசியல் களத்தை பொறுத்தமட்டில் ரஜினிகாந்த், வெளிமாநிலத்தவராகவே பார்க்கப்படுகிறார். தமிழக மக்கள் திமுக அல்லது அதிமுக பக்கமே சாய்ந்திருக்கிறார்கள். பாஜகவும் அந்நியமாகவே பார்க்கப்படுகிறதா?

ரவி: ஜெயலலிதா மண்டியாவை(கர்நாடகா) சேர்ந்தவர் என்றார்கள்; அவர் 4 முறை தமிழக முதல்வராக இருந்தார். கருணாநிதி தெலுங்கர் என்றார்கள், எம்ஜிஆரை மலையாளி என்றார்கள். ஆனால் மக்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்களை முதல்வர்கள் ஆக்கினார்கள். விரோதிகள் எதையாவது பேசிக்கொண்டும் கிளப்பிக்கொண்டும் தான் இருப்பார்கள். ஜெயலலிதா, கருணாநிதி, எம்ஜிஆர், ரஜினிகாந்த் ஆகிய அனைவருமே தமிழ்நாட்டின் பெருமைகளாகவும் முன்மாதிரியாகவுமே திகழ்கிறார்கள். மிகச்சிறந்த கன்னட எழுத்தாளர் டி.வி.குண்டப்பாவின் தாய்மொழி தமிழ். ஆனால் அவர் மிகச்சிறந்த கன்னட எழுத்தாளராக கோலோச்சினார் என்று சி.டி.ரவி தெரிவித்தார்.
 

click me!