அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாஜகவின் மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இரண்டு கட்சிகளும் இழந்தது. இருந்த போதும் வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை இரண்டு கட்சிகளும் இணைந்து சந்திக்க திட்டமிட்டது. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணா தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக கூறி கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி பாஜக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இல்லாத தனி கூட்டணியை அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்
அந்த வகையில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே பாஜக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திலீப் கண்ணன், அம்மு, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருந்த கோமதி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
மாநில நிர்வாகியை தட்டி தூக்கிய அதிமுக
தற்போது பாஜகவின் மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடனான கூட்டணி முறிந்துள்ள நிலையில் வருகிற நாட்களில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
அண்ணாமலைக்கு உடல்நிலை பாதிப்பு..! கோயிலில் மண் சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு நடத்திய பாஜகவினர்