
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அவரது வெற்றிக்கான வழிகள் குறித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். பணம் புகுந்து விளையாடியது என்று ஒரு குற்றச் சாட்டு. சொல்லி அடித்திருக்கிறார் தினகரன் என்று அவரது திட்டமிடலைப் பற்றி விமர்சனங்கள்.
எல்லாம் இருந்தாலும், தேர்தல் களத்தில் ஒரு தேசியக் கட்சியாக இருந்து நோட்டாவை விட பின் தங்கிய பாஜக.,வைச் சேர்ந்தவர் ஒருவர் தினகரனுக்கு இப்போது வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெல்லும் என்ற கணிப்பைத் தகர்த்திருக்கிறார் தினகரன் என்று கூறுகிறார்கள். ஆனால், ஆளும் தரப்புக்கு இணையான ஒரு நபராகத்தான், அதாவது ஆளும் கட்சியின் இன்னொரு பிரிவாகத்தான் தினகரனைப் பார்த்திருக்கிறார்கள் மக்கள் என்கிறார்கள் சிலர்.
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு பாஜக., பிரமுகர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தினகரனின் நம்பிக்கை தரும் பேச்சு, செயல் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது என்று கூறியுள்ள அவர், தினகரன் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலை எதிர்கொண்டார். அவர் தேர்தலை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார் நாராயணன். இவர், பாஜக ஊடகப் பிரிவு தலைமை நிர்வாகி என்பது குறிப்பிடத் தக்கது.