
மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. ஜெ. மறைந்ததை அடுத்து, சசிகலாவே அடுத்த முதலமைச்சர் என்று கூறிய அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கினர். பின்னர், சசிகலாவை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவி தினகரனை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் எடப்பாடி-பன்னீர் அணி. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும், கட்சியும் எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட்டது.
ஜெ. மறைவை அடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், கடந்த மார்ச் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போது 6 சுற்றுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 29,255 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார் தினகரன்.
தினகரன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் நான் முன்னிலை வகித்து வருவது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர், தினகரன், விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை வந்த அவருக்கு தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்கள், தினகரன் சந்திப்புக்காக காத்திருந்த நிலையில், அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.