
குடியரசு தலைவர் தேர்தலில், பாஜகவின் விசுவாசி யார்? என்பதை காட்டிக் கொள்ள நடந்த போட்டா போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. தற்போது, அதிமுகவை கைப்பற்றுவது யார்? என்ற போட்டிதான் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பிரதமரின் ஆசி எடப்பாடிக்கே அதிகம் இருப்பதால், அவருக்கே வெற்றி நிச்சயம் என்கின்றனர் அதிமுகவினர்.
டெல்லியை பொறுத்த வரை, சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கொள்கையில் இருந்து, கொஞ்சமும் பின் வாங்காமலே இருக்கிறது. அதற்காக கொம்பு சீவப்பட்ட பன்னீர்செல்வத்தால், அந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. அதனால், அதற்கு சரியான சாய்ஸ் எடப்பாடிதான் என்ற முடிவுக்கு வந்துள்ளது டெல்லி.
அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டு பிரதமரே, எடப்பாடியிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், பன்னீரிடம் பாஜக தலைவர் அமித்ஷாவே பேசினார். இருவரும் நேரடியாக டெல்லிக்கு சென்றாலும், ஒருவருடன் ஒருவர் இறுதிவரை பேசிக்கொள்ளவே இல்லை.
இதனிடையே, தம்மீதுள்ள வழக்குகள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைக்க காத்திருந்த தினகரனை, யாருமே சந்தித்து பேச முடியாத நிலையை உருவாக்கி, அவராகவே முன்வந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்பந்தத்தை உருவாக்கி விட்டார் எடப்பாடி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலர், எடப்பாடியிடம் என்னென்னவோ நிபந்தனைகள் வைத்து பார்த்தனர். ஆனால், எதையும் காரணம் காட்டி என்னை பணிய வைக்க முடியாது என்று அவர்களிடம் நேரடியாகவே சொல்லி அனுப்பி விட்டார் எடப்பாடி.
இதனிடையே, மீண்டும் பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்க வேண்டும் என பிரதமரிடம், பா.ஜ.கவுக்கு வேண்டப்பட்ட சிலர் தூது சென்றபோது, அந்தக் கோரிக்கையை, முற்றிலுமாக பிரதமர் நிராகரித்துவிட்டார். அதனால், எடப்பாடி முதல்வராக தொடர்வதையே டெல்லி மேலிடம் விரும்புகிறது என்பதை அதிமுகவில் உள்ள மூன்று அணிகளும் தெள்ள தெளிவாக உணர்ந்து விட்டன.
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் அனைவரும், சசிகலா சொல்வதைத்தான், எடப்பாடி கேட்டு நடந்து கொண்டிருக்கிறார் என்று இதுவரை நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், அப்படி இல்லை என்பது குடியரசு தலைவர் தேர்தலில் உறுதியாகி விட்டது.
தற்போதைய சூழலில், “கட்சியும் நானே, ஆட்சியும் நானே” என்பதை எடப்பாடி சொல்லாமல் சொல்லி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உணர்த்தி விட்டார். இப்தார் நோன்பில் தினகரனை அழைக்காதது, குடியரசு தலைவர் தேர்தலுக்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்களை அழைத்து பேசாதது எல்லாம் அதன் வெளிப்பாடுதான் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
இதுவரை எடப்பாடிக்கு டெல்லி வைத்த தேர்வில் எல்லாம் அவர் பாஸ் ஆகி விட்டார். எஞ்சி இருப்பது, சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக அரசியலை விட்டு அகற்றும் தேர்வு ஒன்று மட்டுமே. அதிலும், எடப்பாடி வெற்றி பெற்று விடுவார் என்று டெல்லி நம்புகிறது. அதனால், பன்னீரை விட எடப்பாடியே சரியான சாய்ஸ் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது டெல்லி.
அதனால், டெல்லியால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்று அறிந்த எடப்பாடி, கட்சி மற்றும் ஆட்சியில் தமது தலைமை மற்றும் செல்வாக்கை உறுதிப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்றும் அசைன்மென்டை அவர் கையில் எடுப்பார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு சீராய்வு மனு மீதான தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.