டிவியில் எம்.பி ஜோதிமணியை ‘கேவலமான பெண் என விமர்சித்த பாஜக நிர்வாகி.. சோஷியல் மீடியாவில் காங்கிரஸ்-பாஜக குஸ்தி

By Asianet TamilFirst Published May 19, 2020, 8:37 AM IST
Highlights

தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, புலம் பெயர்ந்தோரின் பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது, “பிரதமரை கல்லால் அடிப்பார்கள்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன், “நீ நாடாளுமன்ற உறுப்பினரா, இல்ல கேவலமான பெண்ணா” என்று விமர்சித்தார். 

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் மலிவாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, புலம் பெயர்ந்தோரின் பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது, “பிரதமரை கல்லால் அடிப்பார்கள்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன், “நீ நாடாளுமன்ற உறுப்பினரா, இல்ல கேவலமான பெண்ணா” என்று விமர்சித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்று நெறியாளர் வருத்தம் தெரிவிக்கச் சொல்லி கரு. நாகராஜனை கேட்டுக்கொண்டும், அவர் கேட்கவில்லை.


இதனால், வெறுப்பான ஜோதிமணி, ‘கரு. நாகராஜன் என்ற மூன்றாம் தர மனிதரால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார். கரு. நாகராஜன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியும் வெளியேறினார். பின்னர் இந்த விவகாரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜோதிமணி விளக்கம் அளித்தார். 
அதில், “புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை,வறுமையை,கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன். மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார்.
நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் எனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு வெளியேறினேன். திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது. பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள்.
என்போன்ற பெண்கள்
முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்


"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் " கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம். பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை, ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் . பெண்களை ஆபாசமாகப் பேசுவது, கொலை, பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின்தொடரலாம். ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும்.” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.


இதனால், சோசியல் மீடியாவில் காங்கிரஸ்- பாஜகவினர் இடையே குஸ்தி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “இத்தாலி சோனியா இந்தியர் மோடியை இழிவாகப் பேசியதை கண்டிக்காத காங்கிரஸ் கட்சி கரு.நாகராஜனை கண்டிப்பதை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

click me!