“தமிழன் தான் என் முதல் அடையாளம்... பிறகுதான் பிஜேபி” – பதவியை உதறினார் பாஜக மாநில பெண் நிர்வாகி

First Published Jan 11, 2017, 4:25 PM IST
Highlights


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டித்து வரும் நிலையில், பாஜகவின் முக்கிய மாநில நிர்வாகியும் கண்டித்து தன்னுடைய மாநில இளைஞரணி துணைத்தலைவர் பொறுப்பை துறந்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கூடாது என்பதில் முனைப்புக்காட்டிய பீட்டா என்கிற அமெரிக்க ஆதரவு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மத்திய வனத்துறை அமைச்சர் மேனகாக காந்தி காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் இணைத்தார். இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் தடையை உறுதிப்படுத்தியது.

தமிழக அரசு உள்ளிட்ட ஒன்பது மனுதாரர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

அப்போது மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர் போன்றார். ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்படும். நிச்சயம் கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்தனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், ஜல்லிக்கட்டு நிச்சயம் நடந்தே தீரும் என உறுதியளித்திருந்தார்.

ஆனால் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு நடக்கவில்லை. இதில் ஜல்லிக்கட்டு நடக்காததற்கு கடந்த காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர்கள் சப்பைக்கட்டு கட்டினர்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு பிரச்னையில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வந்தன.

பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர ராஜன், எச் ராஜா, வானதி சீனிவாசன், இல. கணேசன் போன்றோர்  எல்லாவற்றிற்கும் ஒருபடி சென்று ஜல்லிக்கட்டு கட்டாயம் வரும், அதில் மாற்றம் ஏதும் இல்லை என்று கூறினர்.

நாளாக நாளாக சுதி குறைந்தது. நேற்று முன்தினம் பேட்டியளித்த தமிழிசை சவுந்தர ராஜன ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தனி சட்டம் கொண்டு வரலாம் என ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பை தெரிவித்தார்.

இன்று பேட்டியளித்துள்ள தமிழிசை ஜல்லிக்கட்டு கட்டாயம் வரும். ஆனாலும் சட்டப்பூர்வமாக நடக்க நாம் ஒத்துழைக்க வேண்டும். தடையை மீறி நடத்துவது என்பது தவறு என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சர் தவேயும் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு மாற்றி மாற்றி இரட்டை வேடம் போடுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் .ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் தன்னெழுச்சியாக நடந்து வருகிறது. முக்கிய அம்சமாக அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது வேகமாக எல்லா மாவட்டங்களிலும் பரவி வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவர் சத்தியபாமா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது “ எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர் என்பதுதான் நம் அடையாளம்.

தமிழர் அழிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு எதிராக பாஜகவின் செயல்பாடுகளை கண்டித்து, மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து எனது கட்சிப்பொறுப்பை துறக்கிறேன்.

மாநில இளைஞரணி துணைத்தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். முதலில் எனக்கு தமிழன் என்பதுதான் அடையாளம். பிறகுதான் மற்றதெல்லாம்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

இதனை கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். 

click me!