
பாஜக 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. 11 கோடி தொண்டர்களை கொண்ட கட்சியை திமுக சீண்டினால் அவர்களுக்கு வட்டியுடன் பதிலடி கொடுக்க காத்திருக்கிறோம்.
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தற்போது மற்ற அமைச்சர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டிய அண்ணாமலையிடம், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரம் கேட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஆதாரங்களை ஏற்க மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தவறான தகவல் பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று தெரிவித்த அண்ணாமலை முடிந்தால் வழக்கு தொடருங்கள் என்ற சவால் விடுத்தார்.
இந்தநிலையில், அண்ணாமலை ஆதாரமில்லாமல் திமுக மீது பழி சுமத்தக் கூடாது என்று இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். அண்ணாமலை அதனை தொடர்ந்தால் தாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் சேகர்பாபு கூறியிருந்தார். இந்தநிலையில் சேகர்பாபுவின் பேச்சுக்கு அண்ணாமலை காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே ஒரு தொகுதியில் அரசியல் செய்யும் சேகர்பாபு, செந்தில் பாலாஜி எல்லாம் பா.ஜ.க.-வை சீண்டிப் பார்க்கலாம் என நினைக்கக் கூடாது என்றார்.
மேலும், பாஜக 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. மத்தியில் மோடி பிரதமராக இருக்கிறார். 11 கோடி தொண்டர்கள் பா.ஜ.க.-வில் உள்ளனர். பா.ஜ.க.-வை இவர்கள் தொட்டுப் பார்க்கட்டும். அதுமட்டும் நடந்தால் அவர்களுக்கு வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுப்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக மட்டுமே இயங்குகிறது. காண்ட்ராக்டர்களிடம் கமிஷன் வாங்குகிறார்கள். ஒரு குடும்பம் நன்றாக இருக்க நாட்டை சீரழிக்க கூடாது. அமைச்சர்களின் ஊழல்களை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.