
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டன.
இதைதொடர்ந்து பாஜக வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வற்கான ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
பின்னர், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தமிழக கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை அதிமுக அம்மா அணி ஆதரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டார்.
அவரை தொடர்ந்து இன்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த பன்னீர்செல்வத்திற்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.