சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம்... பற்ற வைத்த சி.வி.சண்முகம்..!

By Asianet TamilFirst Published Jul 7, 2021, 8:26 AM IST
Highlights

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார்.
 

விழுப்புரத்தில் வானுார் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பி வாக்களிக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துதான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகள், மாற்றத்தை விரும்பிய மக்கள், அதிமுக எடுத்த முடிவுகள் ஆகியவையும் தோல்விக்கு காரணமாகிவிட்டது. முடிவு என்றால் அது கூட்டணி. இன்னும் சொல்ல வேண்டுமெனில், அதிமுக மூன்றாவது முறையாகவும் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும். ஆனால் தோல்வி அடைய முக்கிய காரணமே பாஜக கூட்டணிதான். பாஜகவுடனான கூட்டணி காரணமாக அதிமுக முழுமையாக சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்தது.
சிறுபான்மையின மக்களுக்கு நம் மீதோ அதிமுக மீதோ எந்த வருத்தமும் கோபமும் கிடையாது. கொள்கை ரீதியாக அவர்கள் பாஜகவோடு முரண்படுகிறார்கள். பாஜகவை கொள்கை ரீதியாக அவர்கள் ஏற்கவில்லை. அதனால் நாம் அவர்களோடு வைத்த கூட்டணியால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது. இதற்கு விழுப்புரம் தொகுதியையே உதாரணமாகச் சொல்லலாம். விழுப்புரம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் சிறுபான்மையின ஓட்டுகள் உள்ளன. இதில் 18 ஆயிரம் ஓட்டுகள் மட்டும்  நகர்ப்புறத்தில் உள்ளது. ஆனால், எனக்கு 300 ஓட்டுகள்கூட கிடைக்கவில்லை. 16 ஆயிரம் ஓட்டுகள் நகர்ப்புறத்தில் குறைந்திருந்தாலும், கிராமங்களில் வாக்குகளை பெற்ற்றோம். இதுதான் தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த ஓட்டுகள் மட்டும் மாறியிருந்தால் நிலைமை வேறு, இன்று ஆட்சியே வேறு.
இதேபோல பாமகவோடு கூட்டணி வைத்த காரணத்தால் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளையும் நம்மால் பெற முடியவில்லை. இதுவும் அவர்களுக்குள் கொள்கை ரீதியான முரண்பாடு. ஆனால், கூட்டணி கட்சியில் எல்லோரும் நன்றாகத்தான் செயல்பட்டோம். அதன் காரணமாகத்தான் இந்த சூழ்நிலையிலும் வலுவான எதிர்கட்சியாக அதிமுக உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற கட்சியினர் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும்.” என்று சி.வி.சண்முகம் பேசினார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பும் அதிமுக தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம் என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போதும் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்கள் கழித்து அதிமுக தோல்விக்கு பாஜக காரணம் என்று சி.வி.சண்முகம் பேசியிருக்கிறார்.

 

click me!