
தமிழ்நாட்டில் பாஜகதான் எதிர்க்கட்சியா என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன், அப்படி எனில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு மூன்றாவது இடமா எனவும் வினவியுள்ளார். தொடர்ந்து பாஜகவினர் சமூகவலைதளத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என வெளியிட்டு வருகின்றனர் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முணைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. எந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் தனக்கென தமிழ்நாட்டில் தனித்துவத்தை உருவாக்க வேண்டுமென அக்காட்சி வேகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பாமக கூட்டணியில் இருந்தாலும் நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்து களம் கண்டது, அதில் அக்கட்சி பரவலாக வெற்றியும் பெற்றது, ஒரு சில இடங்களில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தமிழ்நாட்டில் உண்மையிலேயே எதிர்க்கட்சி பாஜகதான் என அக்கட்சியினர் உறுதிபட பேசி வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் அதற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மா பேரவை சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிமுகாம் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளை பாஜக புறக்கணித்து வருகிறது. மாநிலம் சார்ந்த பிரச்சனைககளான காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. அதே நேரத்தில் பாஜக தொடர்ந்து தன்னை எதிர்க்கட்சி போல சமூக வலைதளத்தில் சித்தரித்து வருகிறது. இதேபோல் அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு அதிமுக ஐடி விங் தக்க பதிலடி கொடுக்க வேண்டும், பிஜகவின் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.
பாஜக மீதான பொன்னையன் விமர்சனம் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரின் பேச்சை பாஜகவினர் கண்டித்து வருகின்றனர். பொன்னையனுக்கு எம்பி பதவி கிடைக்காததால் அந்த விரக்தியில் அவர் பேசி வருகிறார் எனவே அவரிடம் அதிமுக தலைமை உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை இது பொன்னையனின் தனிப்பட்ட கருத்து. எப்போதும் அதிமுக முன்னிலையில் தான் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார், ஆனால் 2024 மடைதிறந்த வெள்ளம்போல் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் இருக்கப்போவது உறுதி, பாஜக வளர்ந்து வருகிறது எனக் கூறியுள்ளார் இந்நிலையில் சென்னையில் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் மீண்டும் பாஜக குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி பாஜகதான் என்று சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டே இருக்கிறார்கள் பாஜகவுக்கு தெரியாமல் இது பரப்பப்படுகிறதா? 25 நாடாளுமன்ற தொகுதிகளில் நாங்கள் கைப்பற்றுவோம் என்கிறார்கள். அப்படியானால் அதிமுக மூன்றாம் இடமா என பொண்ணையன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.