ஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..!

Published : Jul 24, 2021, 10:05 PM IST
ஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..!

சுருக்கம்

முந்தைய அரசு மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் புதிய அரசு சோதனை நடத்துவதெல்லாம் தமிழகத்தில் வாடிக்கைதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

திருவண்ணாமலையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவின் சித்தாந்தம் என்பது தமிழ் மண்ணை சார்ந்ததுதான். ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்துதான் கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெளர்ணமி, கார்த்திகை தீபத்துக்கு யாருமே அழைக்காமல் பல லட்சம் பேர் வருகிறார்கள். தமிழக மக்களுக்கு ஆன்மிக தேடல் இருக்கிறது. ஆன்மிகத்துடன் வாழ்க்கை பயணத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகத்தான் கோயிலை புண்ணிய தலமாக மக்கள் பார்க்கிறார்கள்.
கிரிவலம் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு விதி வகுத்திருக்கும்போது, அதை பின்பற்றுவது எல்லோருடைய கடமை. ஆர்எஸ்எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய சேவை அமைப்பு ஆகும். அதற்கு ஈடு எதுவும் கிடையாது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இசட் பாதுகாப்பில் உள்ளார். அவர் வருகையின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவது வழக்கம். சாலையில் உள்ள வேகத்தடை போன்றவற்றை தவிர்ப்பார்கள்.

 
மதுரை மாநகராட்சி துணை ஆணையர் அவருடைய உத்தரவில் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு மதுரை எம்.பி. கடிதம் எழுதுகிறார். உடனே, அரசு துரித நடவடிக்கை எடுக்கிறது. இச்செயல் கண்டனத்துக்குரியது. அரசின் எண்ணங்கள் என்ன என்பதை இது பிரதிபலிக்கிறது. இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பாஜக கடிதம் எழுதியிருக்கிறது. தவறு செய்யாத அந்த அதிகாரியை மீண்டும் பணி வழங்க வேண்டும். 
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று கூறுவதில் எந்த முகாந்திரம் கிடையாது. தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் மட்டும் 41 லட்சம் தடுப்பூசிதான் கொடுக்க வேண்டும். ஆனால், 52 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. தடுப்பூசி கூடுதலாக கொடுக்கப்பட்டது. ஜூலையில் 70 லட்சத்துக்கும் கூடுதலாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும். தடுப்பூசி மையங்களில் திமுகவினர் சென்று, டோக்கனை பெற்று, தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு வழங்குகிறார்கள். இதைக் கண்டித்துதான் அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.


பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியை மத்திய அரசு செய்கிறது. லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், சொன்னது போல் குறைக்கவில்லை. முந்தைய அரசு மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் புதிய அரசு சோதனை நடத்துவதெல்லாம் தமிழகத்தில் வாடிக்கைதான். இதில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், அவர்கள் அரசியலுக்காக சோதனை நடத்தினார்களா என்பது தெரிந்துவிடும். அரசு சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல்துறையினர் தனது கடமையைச் சரியாக செய்ய வேண்டும். மனசாட்சிப்படி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!