ஒரே ஆண்டில் ரூ.700 கோடி நன்கொடை பெற்ற பாஜக: டாடா அறக்கட்டளை மட்டும் எவ்வளவு தெரியுமா?

By Selvanayagam PFirst Published Nov 13, 2019, 8:24 AM IST
Highlights

கடந்த 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் நன்கொடை மூலம் ரூ.700 கோடி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடைகள் பெரும்பாலும் ஆன்லைன் பரிமாற்றம், காசோலை ஆகியவை மூலம் வந்துள்ளது. அதில் ரூ.700 கோடியில் பெரும்பகுதி டாடா நிறுவனம் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது

அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால் அதை ரொக்கப் பணமாகப் பெறக்கூடாது. காசோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம் பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. 

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை.
அந்த வகையில் டாடா நிறுவனத்தின் சார்பில் இயங்கும் புரோகிரஸிவ் எலக்ட்ரோல் டிரஸ்ட் அமைப்பு ரூ.356 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

தேசத்தின் மிகப்பணக்கார அறக்கட்டளையான புருடென்ட் எலக்ட்ரோல் டிரஸ்ட் ரூ.54.25 கோடியும் நன்கொடை அளித்துள்ளது. புருடென்ட் டிரஸ்ட்டில், பார்தி குழுமம், ஹீரோ மோட்டார் கார்ப், ஜூப்ளியன்ட் புட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமெண்ட், டிஎல்ப், ஜேகே டயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

பாஜகவின் இந்த அறிக்கையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக எவ்வளவு நிதி வந்தது என்பது குறித்துக் குறிப்பிடவில்லை. தனி நபர்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் பெற்ற நன்கொடையை மட்டும் பாஜக குறிப்பிட்டுள்ளது.

click me!