எல்லை விவகாரத்தில் இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கும்..!! பாஜக பொதுச் செயலாளர் அதிரடி தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published May 26, 2020, 6:28 PM IST
Highlights

இந்த முறையும் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது, இருதரப்பிலும்  முதிர்ச்சி உள்ளவர்கள் உள்ளனர்.  மேலும் இரண்டு நாடுகளுமே எல்லை விரிவாக்கத்தை விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.  

எல்லையில் இந்தியா-சீனாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் சரி செய்யப்படும் என பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்   தெரிவித்துள்ளார். இரு தரப்பிலும் முதிர்ச்சியுள்ளவர்கள் இருப்பதால் எல்லை பிரச்சனை விரைவில்  சுமூகமாக முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்திய-சீன எல்லையான லடாக்கில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவதால் , எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.  இதுவரை சீனா 5 ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினரை எல்லையில் குவித்து வைத்துள்ளதாகவும் ,  போர் தளவாடங்களை கால்வான் பள்ளத்தாக்கில் நிறுத்தி வைத்திருப்பதாகவும்  செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் மூலும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்தியா-சீனா இடையே அமைந்துள்ள சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு  விவகாரத்தில், இருநாடுகளுக்கும் இடையே  நீண்ட நாட்களாக  சிக்கல் நீடித்து வருகிறது . இது தொடர்பாக இரு நாடுகளும் பலகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் எல்லைக்கோட்டை வரையறுப்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை .

 

இந்நிலையில் லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்கோங் த்சோ  என்ற ஏரிப் பகுதியில் சமீபத்தில்  இருநாட்டு படை வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.சுமார் 134 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த ஏரியின் வடக்கு கரை பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது . அதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன . இந்நிலையில்  கடந்த மே- 5 ஆம் தேதி அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும்,  ரோந்து பணியில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலையிட்டு  நடத்திய பேச்சு வார்த்தையில் அங்கு பதற்றம்  தணிந்தது . இதேபோல்  மற்றொரு பிரச்சனையில் கடந்த மே-9 அன்று சிக்கிம் எல்லையில் உள்ள நாகு -லா -பாஸ் அருகே கிட்டத்தட்ட 150 இந்திய -சீன இராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர் , இந்த சம்பவத்தில் இரு தரப்பிலிருந்தும் குறைந்தது 10 வீரர்கள் காயமடைந்தனர். இது இந்தியா- சீனா இடையே அசாதாரன சூழலை ஏற்படுத்தியது. 

 

இந்த சம்பவங்களையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி "இந்திய -சீன எல்லையான அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததுடன், சில பாதுகாப்பு  வசதிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியதாகவும்,  அதாவது  குடில்களை அமைத்ததாகவும் , கடந்த மே மாதம் தொடக்கத்திலிருந்து இந்திய ராணுவம் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி,  சீனா அந்த பகுதயில் தன் ராணுவத்தை குவித்து வருகிறது.  இந்தியாவும் பதிலுக்கும் ராணுவத்தை குவித்து சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள,  பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், இரு நாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் விரைவில் தனியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இந்த பிரச்சனை ராஜதந்திர முறைகளில்  தீர்க்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார், இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர்,  எப்போதும் இல்லாத அளவிற்கு எல்லையில் ஒரு மோசமான சூழ்நிலையையை காணமுடிகிறது ஆனால் அது ராஜதந்திர ரீதியில்  தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்,  இதுபோன்ற சூழ்நிலைகள் நிலவும்போது செயலூக்கமான பேச்சுவார்த்தைகளின் மூலம் அது சரிசெய்யப்படுவது வழக்கம்.

 

இந்த முறையும் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது, இருதரப்பிலும்  முதிர்ச்சி உள்ளவர்கள் உள்ளனர்.  மேலும் இரண்டு நாடுகளுமே எல்லை விரிவாக்கத்தை விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.  அதே நேரத்தில் கிழக்கு லடாக்கில்  இந்திய ரோந்து குழுவினர் சீன தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டனர் என்ற  செய்தியை அவர் நிராகரித்துள்ளார்.   எல்லை விவகாரத்தில் அதிகாரப்பூர்வ  ஆதாரங்களை மட்டுமே நாம் சார்ந்திருக்க வேண்டும், உண்மை இல்லாத பல விஷயங்கள் செய்திகளாக வெளிவருகின்றன என அவர் கூறினார்.  மேலும் எல்லையில் சீனா சில கட்டமைப்புகளை உருவாக்குவது சேட்லைட் வெளியிட்ட புகைப்படத்தில் தெரியவந்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  இந்தியாவும் எல்லையில் கட்டமைப்புகளை மேற்கொண்டு வருவதை கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

click me!