
தமிழகத்தில் பாஜகவின் கனவு பலிக்காது. அவர்களால் தமிழகத்தில் காலூன்றவே முடியாது என திமுக எம்பி திருச்சி சிவா கூறினார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவில் பாஜக மிதந்து கொண்டு இருக்கிறது. கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு, ஆனால் பாஜகவால தமிழகத்தில் காலூன்றவே முடியாது.
காரணம் இது பெரியார் விதை போட்ட பூமி. அறிஞர் அண்ணா வளர்த்த களம். நாங்கள் கருணநிதி காட்டிய வழியில், ஸ்டாலினுடன் பயணித்து வருகிறோம்.
தமிழக மக்களிடம், பாஜக மதரீதியாக பிரித்து ஆதாயம் தேட முயல்கிறது. அவர்கள் நினைக்கும் அளவுக்கு நாங்கள் கொக்கு அல்ல. அவர்கள் வேட்டைக்காரர்களும் அல்ல. நாங்களும் பதிலுக்கு பதில் லாவணி பாட விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் அண்ணா அறிவாலயத்தில் வளர்ந்தவர்கள்.
பொதுமக்களின் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டிய கடமை மத்திய -மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ஆனால் அதில் சிறிதும் கவனம் செலுத்தாமல் உள்ளனர். தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு தவறிவிட்டது.
மாநில அரசு ஆளுங்கட்சிக்குள் இணைப்பை சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. பொது பிரச்சனைகளில் எவ்வித கவனம் செலுத்தவில்லை.
தமிழகத்துக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. திமுக எந்த நேரத்திலும் தேர்தல் களத்தை சந்திக்க தயாராக இருக்கிறது. தமிழகத்தில் வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பொது மக்களுக்கு நிச்சயமாக விடிவு காலம் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.