
எந்த பிரச்சனையாக இருந்தாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குரல் என்னவாக இருக்கும் என தேசிய அளவில் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு மாறியுள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி நெல்லை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துஅக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- மத்திய அரசால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து நின்று தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
நீட்டை அனைத்து தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில் பாஜக மட்டும் நீட் வேண்டும் என கூறி வருகிறது. இவர்களுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. கர்நாடகத்தில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய கூட உரிமை இல்லை. இதன்மூலம் பாஜக கட்சி, பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுகிறது.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அனைத்து சாதியினர், மதத்தினர் அனைவரும் ஒற்றுமையாக தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கி விடலாம் என்ற கனவுடன் பலர் பணி செய்து வருகின்றனர்.
இந்த மண் பெரியார், அண்ணா, கருணாநிதி வாழ்ந்த மண். மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யும் இங்கு உங்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குரல் என்னவாக இருக்கும் என தேசிய அளவில் திரும்பிப்பார்க்கும் அளவிற்குமாறியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த பயப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியை பற்றியும், அமைச்சர்களை பற்றியும் முதல்வர் பற்றியும் பேச எந்த தகுதி கிடையாது என கனிமொழி ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், கனிமொழியின் இந்த பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் 8 மாத திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வில் எந்த விடியலும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு மற்றும் அல்ல ஏவுகணையே வீசினாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்றும் என்று தெரிவித்துள்ளார்.