டார்கெட் சபரீசன்..! பாஜக பயன்படுத்திய பிரம்மாஸ்திரம்! திக் திக் ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Apr 3, 2021, 10:18 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டிற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்த நிலையில் எதுவுமே கிடைக்கவில்லை என்று அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் வெளியே சிரித்த முகத்துடன் பேசி வந்தாலும் அவர்கள் திக் திக் மனநிலையில் தான் உள்ளனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

திமுக தலைவர் கலைஞர் இருந்த போதே திமுக அறக்கட்டளையின் உறுப்பினராக்கப்பட்டவர் சபரீசன். திமுக தலைவராக தற்போது உள்ள ஸ்டாலினுக்கு எல்லாமும் அவர் தான். ஸ்டாலினுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக சுனிலை அழைத்து வந்ததும் சபரீசன் தான் அவரை மாற்றிவிட்டு பிரசாந்த் கிஷோருடன் டீல் போட்டதும் சபரீசன் தான். அத்தோடு திமுகவை தற்போது இயக்கும் வெகு சில நபர்களில் சபரீசன் மிக மிக முக்கியமானவர். மாவட்டச் செயலாளர் நியமனம் முதல் திமுக பொருளாளர் வரை அனைத்து நியமனங்களிலும் சபரீசன் ஒத்துழைப்பு அவசியம்.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட வரவு செலவு கணக்குகளை கையாளுவதும் சபரீசன் தான். திமுகவின் கஜானாக்களாக உள்ள ஜெகத்ரட்சகன், மாறன் சகோதரர்கள், எ.வ.வேலு போன்றோரும் சபரீசன் கண்காணிப்பில் இருப்பவர்கள் தான். இதற்கு முந்தைய தேர்தல்களில் திமுகவிற்கான தேர்தல் செலவுக்கான பணம் எப்படி யார் மூலமாக செல்ல வேண்டும் என்கிற ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பது சபரீசன் தான். அவர் எப்படி சொல்கிறாரோ அப்படித்தான் கட்சியின் தேர்தல் செலவு மேற்கொள்ளப்படும் என்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு பிறகு அமலாக்கத்துறை மூலமாக ஜெகத்ரட்சகனுக்கு நெருக்கடி, தற்போது வருமான வரித்துறை மூலமாக எ.வ.வேலுவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் இந்த முறை திமுக தேர்தல் செலவை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் திணற நேரிட்டதாக கூறுகிறார்கள். அதிலும் வருமான வரித்துறை ரெய்டுக்கு பிறகு ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி பூத் வாரியாக தேர்தல் செலவுக்கு பணத்தை அனுப்ப முடியாத நிலை உருவானது. இதனை வெற்றியாக கருதி வருமான வரித்துறை சிலிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் திமுக தரப்பில் பண நடமாட்டம் அதிகமாகியுள்ளது.

இதனால் டென்சன் ஆன வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் மகன் கார்த்தி ஆகியோர் மூலமாக மறுபடியும் திமுக கேம்பில் பணப்புழக்கம் நடைபெறுவதை மோப்பம் பிடித்துள்ளனர். இதனை அடுத்தே அவர்கள் வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது வருமான வரித்துறை. உண்மையில் வருமான வரித்துறை சபரீசன் வீட்டிற்குள் நுழைந்தது பணத்தை பிடிக்க அல்ல, அந்தப்பணம் எந்த சேனல் மூலம் வருகிறது, எங்கு மடை மாற்றிவிடப்படுகிறது என்கிற விவரத்தை கண்டறியத்தான்.

சபரீசன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெறும் ஒரு லட்சத்து 36ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றும் அதனையும் வருமான வரித்துறை திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் திமுக தரப்பு திரும்ப திரும்ப கூறி வருகிறது. ஆனால் சபரீசன் வீட்டில் வைத்து சில ஆவணங்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. அந்த ஆவணங்கள் குறித்து திமுக தலைமை எதுவும் பேசவில்லை. ஆனால் வருமான வரித்துறையோ வரி ஏய்ப்பு தொடர்பான சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்கள் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பது போகப் போக தெரியும் என்று கூறுகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

அதே சமயம் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் எதுவும் இல்லை என்று அங்கிருந்து வந்த தகவலுக்கு பிறகே ஸ்டாலின் பிரச்சார களத்திற்கு வந்துள்ளார். அதுவரை அவர் திக் திக் மனநிலையில் தான் வேனில் பயணித்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அத்தோடு தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் பூத் கமிட்டிக்கு பணப்பட்டுவாடா செய்யும் நேரத்தில் வருமான வரித்துறை கொடுக்கும் குடைச்சல் திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.

click me!