
மெர்சல் திரைப்பட விவகாரத்தில், விஜயை மிரட்டி வளைத்துப் போட பாஜக முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் வளைத்துப் போடுவது மிரட்டி நிலங்களை அபகரிப்பது எல்லாம் திருமாவளவனின் வேலை என விமர்சித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழிசை சவுந்தரராஜனின் உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். மேலும் பல்வேறு காவல்நிலையங்களில் தமிழிசை மீது புகார்கள் கொடுத்துள்ளனர்.
கரூரில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் அரங்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
தனக்கு தொடர்ந்து பலர் போனில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அசிங்கமாக பேசுவதாகவும் தமிழிசை குற்றம்சாட்டியிருந்தார்.
இப்படியாக பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் நீடித்துவரும் நிலையில், பாஜக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவிற்காக மயிலாடுதுறை சென்ற தமிழிசைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர். இதை அறிந்த பாஜகவினர், அங்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கினர். இதையடுத்து இருதரப்புகும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அவர்களை கைது செய்து போலீசார் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.