மூழ்கும் கப்பல் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தால்.... எடப்பாடியாரை எக்குத்தப்பாக மிரட்டும் அந்த மூன்று பேர்..!!

By Vishnu PriyaFirst Published Feb 18, 2019, 5:25 PM IST
Highlights

கிட்டத்தட்ட இப்படித்தான் அ.தி.மு.க.வின் அரசும். என்னதான் எடப்பாடியார், பன்னீர்செல்வம் இருவரது அணிகளும் இணைந்து அரசை ஓட்டினாலும் கூட, கடந்த 2016 தேர்தலில் ஜெயலலிதாவால் கூட்டணி கட்சிகளாக இணைக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ், தனியரசு மற்றும் தமீமுன் அன்சாரி மூவரும் இந்த அரசின் ஓட்டத்துக்கு மிக முக்கியமே

தலைவாழை இலை போட்டு வைக்கப்படும் ராஜ விருந்தில் பாயசம், சாதமெல்லாம் பிரதானமாக இருந்தாலும் கூட அப்பளம், ஊறுகாய், பருப்பு இவையும் இருந்தால்தான் அந்த விருந்தை ராஜ விருந்தாக ஏற்றுக் கொள்ள முடியும். இல்லையென்றால் அது குறைபட்ட விருந்துதான். 

கிட்டத்தட்ட இப்படித்தான் அ.தி.மு.க.வின் அரசும். என்னதான் எடப்பாடியார், பன்னீர்செல்வம் இருவரது அணிகளும் இணைந்து அரசை ஓட்டினாலும் கூட, கடந்த 2016 தேர்தலில் ஜெயலலிதாவால் கூட்டணி கட்சிகளாக இணைக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ், தனியரசு மற்றும் தமீமுன் அன்சாரி மூவரும் இந்த அரசின் ஓட்டத்துக்கு மிக முக்கியமே.  

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரையில் இவர்கள் முக்கியமே. காரணம், கொங்கு பகுதியில் வாக்கு வங்கி வைத்திருக்கிறார் தனியரசு. சிவகங்கை, ராமநாதபுரம்  பகுதிகளில் முக்குலத்து இளைஞர் வாக்குகளை வைத்திருக்கிறார் கருணாஸ். தமீமுன் அன்சாரியோ தமிழகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களில் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துள்ளார். ஆக மூவருமே முக்கியமானவர்களே அ.தி.மு.க.வுக்கு.

பி.ஜே.பி.யுடன் தான் அ.தி.மு.க.வின் கூட்டணி எனும் நிலையில், இவர்கள் மூன்று பேரின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது என்று அவர்களிடமே கேட்டால்... “ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் மதவாதத்தை விரும்பியதில்லை. அவர்களின் வழியில் செயல்படுவதாக சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தால் நாங்கள் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்து நிரந்தரமாக விலகிவிடுவோம். நாங்கள் என்றுமே பாசிஸ்டுகள் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம். மூழ்கும் கப்பலான பி.ஜே.பி.யுடன், மோடி எதிர்ப்பு அலையில் கூட்டணி வைப்பதன் மூலம் அ.தி.மு.க.வும் அந்த கட்சியுடன் சேர்ந்து காணாமல் போய்விடும்.” என்று சபித்திருக்கிறார். 

உ.தனியரசோ...”தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில் மக்களின் உணர்வுகளுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்காமல் மாற்றாந்தாய் மனப்பன்மையுடன் செயல்படுகிறது பி.ஜே.பி. பல திட்டங்களில் நம் மக்களுக்கு துரோகத்தையே செய்துள்ளது. இப்பேர்ப்பட்ட பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தால் மக்கள் வேதனையில் வெந்துவிடுவார்கள். எனவே மக்கள் விரோத பி.ஜே.பி.யுடன் எடப்பாடியார் கூட்டணி வைக்க மாட்டார் என நம்புகிறேன். கடந்த தேர்தலில் வெறும் ஒற்றை தொகுதியில் மட்டும் பி.ஜே.பி.யை வெல்லவிட்டு, அடக்கி வைத்தவர் அம்மா. அவரது மறைவுக்குப் பின் வரும் பெரிய தேர்தலில் அதே பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைப்பதென்பது மிக மிக தவறானது. அப்படி செய்தால் அ.தி.மு.க.வுடன் நிற்பதில் எங்களுக்கு பெரும் சங்கடங்கள் உருவாகும். பார்க்கலாம்.” என்றிருக்கிறார். 

கருணாஸோ... “கஜா புயலுக்கு தமிழ்நாட்டுக்கு வராத பிரதமர், இப்போ தேர்தலுக்கு மட்டும் வருகிறார்னா நம் மக்களை அவர் வெறும் வாக்குகளாகதான் பார்க்கிறார். மத்திய அரசோட அத்தனை திட்டங்களும் நம் எதிர்கால சந்ததிகளுக்கு கொடுமையை தரும் திட்டங்கள்தான். மக்கள் பிரதிநிதியான என்னால் மக்களின் உணர்வுகளை நன்றாக உணர முடியும். மக்களுக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லை.” என்கிறார். கூட்டணி கட்சிகள் மூவரின் நிலையும் இப்படி இருப்பதை அறிந்து அரண்டிருக்கிறது ஆளுங்கட்சி. ஆனாலும் மூவரும் ஜெயித்து, எம்.எல்.ஏ.வாக இருப்பது இரட்டை இலை சின்னத்தில் என்பதால் ‘என்ன கோபப்பட்டாலும் இவங்க நம்மளை விட்டு போக முடியாது.’ என்று கெத்தாக இருக்கிறது அ.தி.மு.க.

click me!