தனிப்பெரும் கட்சியாக இருந்தும் மேகாலயாவை கோட்டைவிட்ட காங்கிரஸ்!! பட்டைய கிளப்பும் பாஜக.. பரிதாப காங்கிரஸ்

First Published Mar 5, 2018, 10:32 AM IST
Highlights
bjp alliance form government in nagaland and meghalaya


திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதியானது. ஆனால், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தது.

மேகாலயா:

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி, 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மா மகன் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இவைதவிர, டோங்குபர் ராய் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) 6 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயக முன்னணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தனித்து போட்டியிட்ட பாஜக 2 தொகுதிகளில் வென்றது. சுயேச்சைகள் உட்பட சிறிய கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றன.

மேகாலயாவில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 21 இடங்களைப் பிடித்த காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக மட்டுமே இருந்ததே தவிர பெரும்பான்மை இல்லை. இதையடுத்து சிறு கட்சிகளை இணைத்து ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்றது. 

ஆனால் தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தேசிய மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் ஆதரவு அளிப்பதாக ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகள் கூற, அதற்கு பாஜக இசைவு கொடுத்ததால், தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளது. இதனால் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும் வியூகங்கள் சரியில்லாததால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

என்பிபி தலைவர் கான்ராட் சங்மா தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநர் கங்கா பிரசாத்தை நேற்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க என்பிபி-க்கு அழைப்பு விடுத்துள்ளார். கான்ராட் சங்மாவோ அல்லது அவரது சகோதரியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அகதா சங்மாவோ முதல்வராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

நாகாலாந்து:

அதேபோல் 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்திலும் பாஜக-என்.டி.பி.பி கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றது. ஜனதா தள எம்.எல்.ஏ மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏவும் அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. அதனால் நாகாலாந்திலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. என்டிபிபி -பாஜக கூட்டணி சார்பில் நிபியூ ரியோ முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 

நாகாலாந்து மற்றும் திரிபுராவில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி, மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான வியூகங்களை சரியாக வகுக்க தவறியதால், அங்கும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. 
 

click me!