
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து மம்தா பானர்ஜி அரசு பரிசீலித்து வந்த நிலையில், மேற்குவங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்தி வைத்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்குவங்கத்தை போன்று தமிழ்நாட்டிலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், “மேற்குவங்கத்தில் ஆளுநர் சட்டசபையையே முடக்கி உள்ளார். தமிழ்நாட்டிலும் இதேபோல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் நிலவும். திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.” என்று திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு எதிராக பல்வேறு அரசு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான, இந்த தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் அதிமுகவுக்கு, இந்த நேரத்தில் அவருக்கு எதிரான நிலையை எடுத்து இருக்கிறது பாஜக.
எடப்பாடி பழனிசாமி பேச்சு குறித்து பேசிய, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கின் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சியை தேர்வு செய்யப்பட்ட அரசு எப்படி ஆட்சியை நடத்துகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேற்கு வங்க மாநில ஆளுநர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார், அதன் அடிப்படையில் தமிழக எதிர்கட்சி தலைவர் ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார்.
மேற்குவங்கத்தை போல நெருக்கடியான சூழல் தமிழகத்தில் இருக்கின்றதாக நான் நினைக்கவில்லை எனக்கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும். இதில் பாஜக நிலைப்பாடு என்று எதுவும் இப்போதைக்கு இல்லை, இதில் மாநில தலைமை ஏதேனும் கருத்து சொல்லலாம்’ என்று கருத்து தெரிவித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக, தற்போது இந்த சூழலில் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காததால் அதிமுகவினருக்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.