யோகிக்கு தென் மாவட்டம்... அமித் ஷாவுக்கு கொங்கு மாவட்டம்... தமிழகத்தில் அதிரடிக்கு தயாராகும் பாஜக!

By Asianet TamilFirst Published Feb 2, 2019, 10:56 AM IST
Highlights

 நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள தொண்டர்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் ஆளும் பாஜக ஈடுப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வட இந்திய தலைவர்களை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்த பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நடத்தி முடித்ததும், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் எப்படி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும், மோடியின் 5 ஆண்டுகால சாதனைகளை வாக்காளர்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியெல்லாம் பாஜக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக, பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பா.ஜ.க. நிர்வாகிகளும் பங்கேற்கும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டங்களில் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித்ஷா, அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்று பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடுத்தடுத்த வாரங்களில் பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 4 அல்லது 5 தொகுதிகளை ஒவ்வொரு மேலிடத் தலைவர்களுக்கும் ஒதுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவரும் பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து பேச இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்பது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியத் தலைவர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் தமிழகம் வர உள்ளனர்.  தற்போதைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தென் மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4  நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் பிப்ரவரி 12-ஆம் தேதி இந்தத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க. தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.

இதேபோல மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய கொங்கு மண்டல தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மத்தியமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி ஆகியோருக்கு டெல்டா மாவட்டங்களும், வட மாவட்டங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடனான சந்திப்புகளுக்கு பிறகு கூட்டணி முடிவானதும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
 

click me!