பிஹார் தேர்தல் திமுகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி... கவிழ்த்திய காங்கிரஸ்..!

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2020, 1:31 PM IST
Highlights

பீகாரில் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் சுமார் 150தொகுதிகளில் அரசியல் விழிப்புணர்வு குழு அமைத்து நிதிஷ்குமார் , பாஜக கூட்டணிக்கு எதிராகக் கடந்த 10மாதங்கள் மேலாக வேலை செய்தார்

பிகார் தேர்தல் தமிழகத்தில் திமுகவுக்கும் பல வகையில் எச்சரிக்கை மணியடித்துள்ளது. பிகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் அமைத்த மகா கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் வெற்றியை நெருங்கி வந்து தோல்வியைச் சந்தித்தது. தலித் வாக்குகளை குறிவைத்து களம் கண்ட பஸ்வானின் லோக் ஜனசக்தி பல இடங்களில் வாக்குகளை பிரித்தது. அதிலும் பாஜகவுக்கு எதிராக லோக் ஜனசக்தி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால் நிதிஷ் குமார் மீதான அதிருப்தி வாக்குகளை மகா கூட்டணிக்கு செல்லாமல் பாஜக வசம் செல்ல காரணமாக அமைந்தது.

இஸ்லாமிய வாக்குகளை பெறும் ஏ.ஐ.எம்.ஐ.எம். 5 தொகுதிகளை கைப்பற்றியதுடன் பல தொகுதிகளில் வாக்குகளை பிரித்தது. இதனாலே மகா கூட்டணியால் வெற்றியை நெருங்க முடிந்ததே ஒழிய ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் இதே நிலைமைதா ஏற்பட்டது. தேமுதிக, விசிக, மதிமுக, இடது சாரிகள், தமாகா இணைந்து உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி மாற்றத்துக்கான அணி என முன்னிறுத்தி களத்தில் இறங்கின. அடிப்படையில் ஆளும் கட்சி எதிர்ப்பு வாக்குகளை பங்குபோட்டு மீண்டும் அதிமுகவையே வெற்றி பெற வைத்தது. தற்போதைய பிகார் தேர்தலைப் போலவே பல தொகுதிகளில் 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் திமுக வெற்றியை பறிகொடுத்தது. இது 2016 நிலைமை தான் என திமுக சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.

திமுக கூட்டணியில் தற்போது விசிக, மதிமுக, இடதுசாரிகள் ஆகியவை இணைந்திருந்தாலும் இந்தக் கூட்டணியை இறுதி வரை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது. பாஜகவை விரட்ட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இணைந்துள்ளோம் என மதிமுகவும், விசிகவும் தொடர்ந்து கூறிவருகின்றன. அதனால் அணி மாற வாய்ப்பில்லை. ஆனால் சீட்டுகளின் எண்ணிக்கை முடிவாகும் போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மதிமுக, விசிக மட்டுமல்லாமல் இன்னும் சில சிறிய கட்சிகள் உள்ளன. அவை அத்தனையையும் கூட்டணிக்குள் கொண்டுவந்து வாக்குகள் சிதறாமல் திமுக அடைகாக்க வேண்டும். இல்லையேல் அது திமுகவுக்கு எதிராக முடிய வாய்ப்பிருக்கிறது. இவை தவிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் பல தொகுதிகளில் வாக்குகளை பிரிக்கும் வேலையை செய்யும். அதுவும் திமுகவுக்கு வர வேண்டிய வாக்குகளாகத் தான் இருக்கும். மேலும் அக்கட்சியுடன் வேறு சில சிறிய கட்சிகள் இணைந்துவிட்டால் மேலும் திமுகவுக்கு சங்கடத்தை உருவாகலாம். 

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் தான். 70 தொகுதியை பெற்ற காங்கிரஸ் 19 ல் மட்டுமே வெற்றி, காங்கிரஸுக்கு தொகுதியை குறைத்திருந்தால்  ரா. ஜ. த க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்து இருக்கலாம். பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் பெரும்பாலும் தோல்வி அடைந்தது. அந்தத் தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிட்டிருந்தால் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கைகூடிவந்திருக்கும்.

இதுதான் 2016 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் நடந்தது. காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி சில தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலை 2021ல் தொடராமல் இருக்க காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை திமுக குறைக்க வேண்டும்.

 

அடுத்து பிரஷாந்த் கிஷோரை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என்பதையும் பீகார் தேர்தல் உணர்த்தி உள்ளது. பீகாரில் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் சுமார் 150தொகுதிகளில் அரசியல் விழிப்புணர்வு குழு அமைத்து நிதிஷ்குமார் , பாஜக கூட்டணிக்கு எதிராகக் கடந்த 10மாதங்கள் மேலாக வேலை செய்தார், அதற்கு யுக்திகளை வகுத்துக் கொடுத்திருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவல். அதே போல் தமிழகத்திலும் ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

click me!