பேசும்போது நிதானித்து பேசுங்கள்... இல்லை தமிழ் மக்களால் ஓரம் கட்டப்படுவீர்கள்! ரஜினியை எச்சரித்த பாரதிராஜா!

First Published Apr 16, 2018, 5:37 PM IST
Highlights
Bharathi Raja condemned Rajini Kanth


மீத்தேன், நியூட்ரினோ எதிராக குரல் கொடுக்காத நீங்கள், காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே என்று நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குநர் பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் பலர் போலீசாரால் தாக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவரும் தாக்கப்பட்டார். போலீசார் ஒருவரை போராட்டக்காரர்கள் தாக்கியதற்கு ரஜினி கண்டனம் தெரிவித்திருந்தார். காவலர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது என்று ரஜினி கூறியதற்கு கடும் விமர்சனம் எழுந்தன. 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீது இயக்குநர் பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த நேரத்தில் நம், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையும் அறவழியில் போராடியது. ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்து பதம் பார்க்க நினைக்கும் ரஜினி அவர்களின் சமீபத்திய டுவிட்டர் பேச்சு.

அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது. இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்தபோது, குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுனீர்களா? இல்லை ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா? எதற்கும் வாய் திறக்காத நீங்கள், காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம் இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே.

இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது... நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகாவின் தூதுவர் என்று. உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது. காவிரி பிரச்சனை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். சேதமடைந்தது எங்கள் தமிழர்களின் சொத்துக்கள்... நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு சாப்பாட்டிற்கும் உங்கள் வீட்டு குடி தண்ணீருக்கும் சேர்த்துதான் எங்கள் வீரத் தமிழ் இளைஞர்கள் போலீசர் நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள். பேசும்போது எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள்... இல்லை என்றால் எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரம் கட்டப்படுவீர்கள் என்று அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியுள்ளார்.

click me!