
ஜல்லிக்கட்டுக்காக நடக்கின்ற போராட்டம் என்று மேலோட்டமாக சொல்லப்பட்ட போராட்டம் மகத்தானதாக மாறியுள்ளது. இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பதை கடந்து, பீட்டாவுக்கு தடை , கோக், பெப்சி புறக்கணிப்பு, என அன்னிய பன்னாட்டு பொருட்களுக்கு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளதன் மூலம் இது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என கொள்ளலாம்.
சீமை கருவேல மரம், யூகலிப்டசுக்கு எதிரான போராட்டம் என துவங்கி மண்ணின் வளத்தை காக்கும் போராட்டமாக இது வளர்ச்சியடைந்துள்ளது. எந்த ஒரு தலைமுறைக்கும் இல்லாத ஒரு வாய்ப்பு இந்த தலைமுறைக்கு கிடைத்துள்ளது.
உள்ளங்கையில் உலகம் , நவீனம், இண்டெர்நெட் , ஃபேஸ்புக் , நவீன டெக்னாலஜி என அனைவருக்கும் புத்தி சொல்லக்கூடிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ள ஒரு தலைமுறை தற்போதைய தலைமுறை ஆகும்.
சமூக அக்கறையில் இவர்கள் தனித்துவமாக மிளிர்க்கிறார்கள், மோசடி ஏமாற்று அரசியல் வாதிகள் பின்னால் ஓடும் கூட்டமல்ல இவர்கள், மொழி வெறி இனவெறி , மதவெறி கடந்தவர்கள். விஞ்ஞானம் படித்ததால் அனைத்தும் இவர்கள் உள்ளங்கையில் உள்ளதால் மொழி ,மதம் , இனம் கடந்து ஒன்றிணைந்து உள்ளனர்.
புரிதல் இல்லாதவர்கள் அல்ல. தமிழ் தாய்மொழி , இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் தொடர்பு மொழி என்பதை நோக்கி பயணப்பட்டு கொண்டிருப்பவர்கள். இவர்களை எதை வைத்தும் பிரிக்க முடியாது.
ஆனால் சரியாக வழிகாட்டப்பட்டால் எதற்காகவும் போராடும் உன்னத தலைமுறையை இந்தியா சந்திக்கும். 1965 ல் தமிழ் மொழி காக்க நடந்த போராட்டத்தில் தமிழ் மொழி காக்கிறேன் என்று தன்னை வளப்படுத்திகொண்டவர்களை பார்த்து, சினிமா கவர்ச்சி மூலம் அரசியலில் குதித்து ஊழல் செய்தவர்களை பார்த்து அனைத்தையும் புரிந்து வைத்துள்ள இளைஞர் கூட்டம் அனைத்தையும் அலசி பார்க்கும் நிலை உள்ளது.
இவர்களிடம் வேஷம் போடும் அரசியல் வாதிகள் , நடிகர்களுக்கு இடமில்லை. ஜல்லிக்கட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கூடியிருந்தாலும் சில விஷமிகள் அதில் ஊடுருவி உள்ள காரணத்தால் போலீசார் மீது தாக்குதல் ஊடக செய்தியாளர்களை திட்டுவது , விமர்சிப்பது என்பது நடக்கிறது. போராட்ட களத்திலும் ஊடக வெளிச்சம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நல்ல போராளி உணர்வான்.
பெரும்பாலானோர் ஒரே சிந்தனையில் இருப்பதால் இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்காமல் உள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கில் கூடியுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள். போராட்டத்தை நடத்துகிறார்கள், தலைமை யார் என்ற நிலை இல்லாததால் அணி திரண்டு நின்றாலும் போராட்டத்தை நிறுத்துவதா ?தொடர்வதா ? என்ற தடுமாற்றம் தெரிகிறது.
இளைஞர்களின் சக்தி மகத்தானது ,அதன் பலம் தான் , இன்று முதலமைச்சர் டெல்லி பயணமும் , பிரதமர் நேரம் ஒதுக்கி இருப்பதும். ஆனால் நாளை ஓபிஎஸ் , மோடி சந்திப்பில் என்ன நடக்கும், சுற்று சூழல் அமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் போராட்டம் எந்த நிலையை அடையும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாய் எல்லோர் முன்னாலும் உள்ளது.
பிரதமரை சந்தித்தேன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார் என்ற பதிலை ஓபிஎஸ் சொன்னால் அதை நம்புவார்களா , ஏற்று கொள்வார்களா போராட்டத்தை கைவிடுவார்களா? என்பது சிக்கலான பிரச்சனையே.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை இயற்றுவது மத்திய அரசால் மறுக்கப்பட்டால் அடுத்து என்ன நிலை ? போராட்டத்தை இதே போல் நீட்டிப்பதா ? அல்லது வேறு வடிவத்துக்கு மாற்றுவதா என்பதை இளைஞர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
போராட்டத்தை விலக்கி தினந்தோறும் குறித்த நேரத்தில் கூடுவது எதிர்ப்பை தெரிவித்து விட்டு கலைவது போன்ற வேறு வடிவங்களுக்கும் மாற்றலாம். ஆனால் இதே நிலையை தொடர்வது அனைவருக்கும் சோர்வையும் கடைசியில் மோதலில் முடியும் வாய்ப்பும் உள்ளது.
இப்போது நடத்திய போராட்டம் இந்தியாவையே அசைத்து பார்த்துள்ளது. ஆகவே இதில் இனி சால்ஜாப்பு சொல்ல முடியாது என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் உணர்ந்துள்ளது வெளிப்படை.
மிகப்பெரிய ஆறுதலான விஷயம் போராடுபவர்கள் கூறுவது இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல விவசாயிகள் பிரச்சனையா , கல்வி கட்டண கொள்ளையா, நீட் தேர்வா , அரசியல் வாதிகள் சர்வாதிகாரமா? , அடிப்படை பிரச்சனையா? , அரசாங்க ஊழலா? , அடக்குமுறையா? , நீர் நிலை பாதுகாப்பா? அரசு சொத்துக்கள் பாதுகாப்பா? , சமூக பிரச்சனையா? , சாதிமத ஒற்றுமையா? , சுற்று சூழல் பாதுகாப்பா ? அனைத்திலும் நாங்கள் வருங்காலத்தில் இறங்குவோம் என்று கூறியுள்ளது ஏய்த்து பிழைப்போர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இனி இந்த தலைமுறையை வைத்து ஏய்த்து பிழைக்க முடியாது என்பதை வேஷதாரிகள் , போலி அரசியல்வாதிகள் புரிந்திருப்பார்கள். மகத்தானவர்களே தேசம் உங்கள் கையில் விஞ்ஞான ஒளியில் அனைத்தையும் சமூக அக்கறை கண் கொண்டு , கலாம் கனவு கண்ட நதி நீர் இணைப்பு , நிலச்சீர்த்திருத்தம் , அன்னிய நிறுவங்களின் ஏய்ப்பை தடுப்பது , நம் இயற்கை வளங்களை பாதுக்காக்கும் போராட்டத்தை நடத்துவது என்பதே லட்சியமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பும்.
அதற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக போராட்டக்களத்தில் இளைஞர்கள் பேட்டி அளிப்பது நாளைய உலகம் நம்பிக்கை மிக்க ஒன்றாக மாறும் என்ற செய்தியை நமக்கு சொல்கிறது.
இதுவரை ஏன் அதற்கு போராடவில்லை , இதற்கு போராடவில்லை என்று கேட்பவர்களுக்கு இவர்கள் பதில் ஆம் , ஆனல் இனி போராடுவோம் என்பதே... - --- முத்தலீஃப்