வழக்கு விசாரணையில் உள்ளதால். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் குழுவுக்கு காலஅவகாசம் நீட்டிக்க வாய்ப்பு?

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2021, 11:57 AM IST
Highlights

கடந்த ஜூன் 10-ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14-ம் தேதி முதல் இதுவரை 4 முறை அக்குழு கூடி ஆய்வு செய்துள்ளது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் குழுவுக்கு எதிரான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து. 

கடந்த ஜூன் 10-ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14-ம் தேதி முதல் இதுவரை 4 முறை அக்குழு கூடி ஆய்வு செய்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து 85,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை குழுவிடம் வழங்கி உள்ள நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை, நீட் தேர்வினால் ஏற்பட்ட தாக்கம் என்ன? என்பது குறித்து ஏ.கே.ராஜன் குழு இதுவரை 90% பணிகளை நிறைவு செய்துள்ளது. இதனிடையே, ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வரும் 13-ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அறிக்கை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏ.கே.ராஜன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வழக்கு காரணமாகவும், அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாலும் ஏ.கே.ராஜன் குழுவின் அவகாசத்தை மேலும் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குழுவின் அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், விரைவில் கால நீட்டிப்புக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!