டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம் முன்பாக பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்ற பார் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கம் சார்பாக சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா ? , காத்திடு காத்திடு 3 லட்சம் தொழிலார்களை காத்திடு’ என்று பல்வேறு வாசகங்களை கூறியும், பதாகைகளை ஏந்தியும் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பார் உரிமையாளர்கள் சங்கத்தினர், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். இளமையான அமைச்சர்கள் பலரை நியமித்தார்கள். நமது அமைச்சர் செந்தில் பாலாஜி டெண்டரை முறைப்படி நடத்தாமல் நடத்தி இருக்கிறார். முறையான கையெழுத்து இல்லாமல், இட அனுமதி பெறாமல் முறைகேடு நடந்துள்ளது. அமைச்சர் அவர்களது பினாமிகள் பெயரின் கீழ் பார்களை நடத்த ஆசைப்படுகிறார்கள்.
எந்தவித ஆவணமும் இல்லாதவர்கள் இந்த டெண்டரில் கலந்து கொள்கிறார்கள். இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒயின் ஷாப்புகளுக்கான பார்களுக்கு முறையான டெண்டரை விட வேண்டும். இந்த முறைகேடான டெண்டரில் கரூர்,அரவக்குறிச்சி,கோவை என அவர்களுக்கு, அதாவது அமைச்சரின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் இதனை சரி செய்ய வேண்டும். நாங்கள் புகார் மனுவை கொடுக்க தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்தோம். ஆனால், எங்களை சரியாக நடத்தவில்லை.அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும்’ என்று பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.