
தாம் அரசியல் சார்பின்றி பணியாற்றவுள்ளதாக தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பன்வாரி லால் புரோஹித்.
அப்போது அவர், தமிழக அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து, தமிழக அரசுக்கு தனது ஆதரவு இருக்கும் என்று கூறினார். மேலும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவதில் தாம் என்றும் உறுதியுடன் இருப்பதாகக் கூறிய பன்வாரி லால் புரோஹித், அரசியல் சட்டத்தைக் காப்பதே தனது முதல் கடமை என்றும், அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்றும் கூறினார்.
தமிழக அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து, தமிழக அரசுக்கு தமது ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கும் என்று கூறிய ஆளுநர், அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படைத் தன்மை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அருகே அழைத்து இருவர் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்தார். அப்போது, அவரது செயல் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், அவர் ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.