
கோவை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் சசிகலா, டிடிவி தினகரனின் புகைப்படங்கள் இல்லாதது அவரும் அணி மாறலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஓ.பி.எஸ். தனிக் களம் கண்ட போது அவருக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி.
இவரைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சின்னராஜ், கோவை வடக்கு எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோர் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
தற்போது சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜும் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த குறிப்பாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து சசிகலா அணியில் இருந்து விலகி ஓ.பி.எஸ்.பக்கம் சாய்ந்து வருவது டிடிவி தினகரனுக்கு கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் அளித்துள்ளதாம்...
இதனால் கோவை புறநகர் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கும் எஸ்.பி.வேலுமணி மீது தினகரன் கடுங்கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது புறம் இருக்க கோவையில் குடிகொண்டிருக்கும் சசிகலாவின் ஒன்றுவிட்ட சகோதரியின் கணவரான ராவணனிடம் எஸ்.பி.வேலுமணி நெருக்கமாக இருப்பதும் தினகரனுக்கு பிடிக்கவில்லையாம்...
இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த தினகரன் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து வேலுமணியை நீக்கி விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளாராம்..
இது குறித்து வேலுமணிக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் எதிர்வினையே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை சென்ற போது அவரை வாழ்த்தி எஸ்.பி.யால் வைக்கப்பட்ட பேனர்களில் சசிகலா, மற்றும் டிடிவி தினகரனின் படங்கள் இடம்பெறவில்லையாம்...
எஸ்.பி.வேலுமணி தடம்மாறுவாரா?தாக்குப்பிடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...!