கடனை கட்டலைனு கறவை மாட்டை ஓட்டிட்டு போயிட்டாங்க..! கதறும் விவசாய குடும்பம்..!

First Published Dec 12, 2017, 3:35 PM IST
Highlights
bank officers seized farmer family cow


வங்கியில் பெற்ற கடனுக்கான தவணைத்தொகையை கட்ட தவறிய விவசாயிகளின் டிராக்டர்களையும் ஆடு மாடுகளையும் ஓட்டி செல்லும் அவலம் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன.

அப்படி ஒரு சம்பவம் திருச்சியிலும் அரங்கேறி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முருங்கம்பட்டியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் வினோத் குமார். இவர் கறவை மாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்துவருகிறார். எனவே கறவை மாடுதான் வினோத்குமார் குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. 

வினோத் குமார் தன்னுடன் நின்றுவிடாமல், தனது ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் அதே ஊரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் கடன் வாங்கி கறவை மாடுகள் வாங்கி கொடுத்துள்ளார். அந்த கடன்களுக்கு வினோத் குமாரே ஜாமீன் கையெழுத்தும் போட்டுள்ளார்.

சரியான மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டதன் காரணமாக வங்கியில் கடன் பெற்ற சிலர், சில மாதங்களாக தவணைத் தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட வினோத்குமாரின் மாட்டை வங்கி அதிகாரிகள் ஆள் வைத்து பறிமுதல் செய்துள்ளனர். 

வினோத் குமாரின் தாய் சம்பூர்ணம், வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மினி ஆட்டோவில் வந்த சிலர், திடீரென மாட்டை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளனர். இதைக் கண்டு பதறிப்போன சம்பூர்ணம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயுள்ளார்.

இதுதொடர்பாக ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் திடீரென வங்கி அதிகாரிகள் கறவை மாட்டை பறிமுதல் செய்தது, வங்கி அதிகாரிகள் மீது பயத்தை ஏற்படுத்துகிறது என சம்பூர்ணம் தெரிவித்துள்ளார்.

வங்கியில் கடன் பெற்ற விவசாயிகள், சில தவணைத் தொகைகளை செலுத்தவில்லை என்றால், டிராக்டர்கள், மாடுகள் என அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்தவற்றை பறிமுதல் செய்வதை வங்கி அதிகாரிகள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் மேலும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வினோத் குமார், தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
 

click me!