
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு காரணம் பிளாஸ்டிக் பைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க தமிழக அரசு இது வரை பல முயற்சிகளை மேற்கொண்டு அது தோல்வியிலேயே முடிந்துள்ளது.
உதகை, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில சுற்றுலாத் தளங்களில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று, மண் மாசு படுவதுடன், பலவிதமான நோய்களும் பரவுகின்றன.
இந்நிலையில் தமிழக சட்டங்ப பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பால், தயிர் தவிர்த்து மற்ற பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப் பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மழைநீர் கால்வாய்களை அடைத்து வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் முக்கிய காரணமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இத்தகைய இயற்கை சீற்றங்களின் போதும், தொற்று நோய் பரவாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.