வாகனங்களில் தலைவர்களின் படத்திற்கு தடை... உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 10, 2021, 12:47 PM IST
Highlights

வாகன உரிமையாளர்களுக்கு போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். வாகனத்தை போலீஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள். அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் கட்சி கொடிகளையும், தலைவர்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தலாம். தேர்தல் அல்லாத நேரங்களில் அது தேவையில்லாதது.

வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்;- 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர்கள் என ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இதை ஒட்டிக்கொண்டு கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே அமைந்திருக்கிறது. 

மேலும், மற்ற மாநிலங்களில் அதிகளவு சட்டக்கல்லூரி உருவாக தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக ரவுடிகள் பலர் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் இருந்து பணம் கொடுத்து பட்டங்களை பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்துகிறார்கள். காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆகவே, 2019ம் ஆண்டு விதிகளின் படி பார் கவுன்சிலின் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனுமதியில்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வழங்கக்கூடாது போன்ற விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து படங்களையும் 60 நாட்களில் நீக்க வேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். வாகனத்தை போலீஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள். அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் கட்சி கொடிகளையும், தலைவர்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தலாம். தேர்தல் அல்லாத நேரங்களில் அது தேவையில்லாதது.

வாகனங்களின் வெளிப்புறங்களில் புகைப்படங்களை பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை. வாகன உரிமம் புதுப்பித்தல், முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். உத்தரவுகளை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

click me!