தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை... என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Dec 10, 2021, 4:59 PM IST
Highlights

கொரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கல்லூரி வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் வழியாக உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் புதிய வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களில் உஷார்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கொரோனா பாதித்த அண்ணாபல்கலைகழக மாணவர்கள் ஒன்பது பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றார். இந்நிலையில் கொரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கல்லூரி வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் வழியாக உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

மேலும் கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி அல்லது மாணவர்கள் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை/ பட்டமளிப்பு போன்ற அவசியமான நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படும். அதேபோல், கல்லூரிகளில் உணவருந்த ஒரே நேரத்தில் மாணவர்களை அனுமதிக்க கூடாது. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வகுப்பறையில் கூட முகக்கவசம் மற்றும் இடைவெளி அவசியம் என்று அமைச்சர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

click me!