வீரபாண்டி ராஜாவின் மாரடைப்பு மரணத்தின் பின்னணி... இறுதி அஞ்சலிக்கு செல்லாத உதயநிதி.. காரணம் என்ன..?

By Thiraviaraj RMFirst Published Oct 7, 2021, 1:06 PM IST
Highlights

ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து காத்திருந்தார் ஆ.ராஜா. அதுவும் கிடைக்காத நிலையில் மிகுந்த மனை உளைச்சலில் இருந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் 

 சேலம்  மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி பல ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்திவிட்டார். ஆனால், உதயநிதி இறுதி அஞ்சலி செலுத்துவது தவிர்க்கப்பட்ட விவகாரம்தான் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘’‘‘ஆ.ராஜா தனது பிறந்தநாளன்று இறந்ததுதான் உடன்பிறப்புக்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த விஷயம் வெளியே தெரியவர, அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்துவிட்டனர். உடனடியாக மதுரையில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், ‘நல்லதானே இருந்தார்..!’ என்று சொல்லிவிட்டு உடனடியாக தனி விமானத்தைப் பிடித்து சேலம் சென்றார். அப்போது, அவரது காதில் படும்படியாக மறைந்த ஆ.ராஜாவின் ஆதரவாளர்கள் உதிர்த்த வார்த்தைகள்தான் கொஞ்சம் நெருட வைத்துவிட்டதாம்.

தி.மு.க.வில் கலைஞருக்கு அடுத்து செல்வாக்கு படைத்த தலைவராக விளங்கியவர் வீரபாண்டி ஆறுமுகம். கலைஞரிடம் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் பேச தயங்கும் நிலையில்கூட, பட்டடென மனதில் பட்டதை சொல்லிவிடுவார் வீரபாண்டியார். அந்தளவிற்கு துணிச்சல் மிக்கவர். கலைஞர் மறைவிற்குப் பிறகும், வீரபாண்டியார் மறைவிற்குப் பிறகும் ஆ.ராஜா அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவருக்கு போட்டியாக அரசியல் செய்யும் பனைமரத்துப் பட்டி ராஜேந்திரனுக்கு சீட் கொடுத்து, அவருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துவந்தார் ஸ்டாலின். விளைவு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது. ஆ.ராஜாவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், தி.மு.க. சில தொகுதிகளில் வென்றிருக்கும் என்று அப்போது உடன் பிறப்புக்களே பேசிக்கொண்டனர்.

கடந்த சில வருடங்களாகவே மன உளைச்சலில் இருந்த ஆ.ராஜா, அடிக்கடி கே.என்.நேருவைப் பார்த்து தனது சூழலை விளக்கிவந்தாராம். ‘சமயம் பார்த்து தலைவரிடம் சொல்லுகிறேன். உங்களுக்கு உரிய முக்கியத்தும் கொடுக்கப்படும்’ என்று நேருவும் ஆறுதலாக கூறிவந்தாராம். காரணம், நேருவும், வீரபாண்டி ஆறுமுகமும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில்தான் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து காத்திருந்தார் ஆ.ராஜா. அதுவும் கிடைக்காத நிலையில் மிகுந்த மனை உளைச்சலில் இருந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த ஆத்திரத்தில்தான் ஸ்டாலின் வரும்போது, ‘சில வார்த்தைகளை’ உதிர்த்ததாக கூறப்படுகிறது.

கோவை படப்பிடிப்பில் இருந்த சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், முதல்வர் சென்றபோதே, ‘வார்த்தைகள் உதிர்ப்பு’ நடந்ததால், ‘இறுதி அஞ்சலிக்கு போகவேண்டாம்’ என்று உத்தரவு போனதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், இறுதிநேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டாராம் உதயநிதி. அதே சமயம் அஞ்சலி செலுத்த சென்ற கனிமொழியைப் பார்த்து, அவர்களது குடும்பத்தினர் கண்கலங்கிவிட்டார்களாம். ‘கருணாநிதி இருந்திருந்தால் எங்களுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்குமா?-’ என்று அவர்கள் குடும்பத்தினர் கதறியிருக்கின்றனர்!’’ என்றனர்.

இந்த விவகாரம்தான் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

click me!