
சென்னை காமராஜர் சாலையில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டை பைக்கில் இழுத்து சென்ற பீட்டர் என்ற இளைஞர், தனது தவறை உணர்ந்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், இருசக்கர வாகனங்களை நள்ளிரவில் வேகமாக ஓட்டுவதை இளைஞர்கள் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதைத் தடுக்க போலீசார் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த புத்தாண்டின்போதும் தமிழகம் முழுதும் பல்வேறு விபத்துகள் நிகழ்ந்தன.
புத்தாண்டின் முந்தைய இரவு, பைக்குகளில் சென்ற இளைஞர்கள் சிலர், போலீசார் வைத்திருந்த பேரிகார்டை சாலையில் இழுத்து சென்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே, பேரிகார்டை இழுத்து சென்ற பீட்டர் என்ற இளைஞர், அந்த செயல் தொடர்பாக முகநூலில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், பைக்கை வேகமாக ஓட்டி சென்றோம். எங்களை பிடித்த போலீஸ், வேகமாக ஓட்டக்கூடாது என எச்சரித்தனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால், பேரிகார்டை இழுத்து சென்றோம் எனவும் போலீஸாரை ஒருமையிலும் என திமிராக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதை வைத்து பீட்டர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பேரிகார்டை இழுத்து சென்றதை கெத்தாக நினைத்து முகநூலில் தம்பட்டம் அடித்த பீட்டர், தற்போது தான் செய்த செயல் தவறு என்பதை உணர்ந்ததாகவும் இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் எனவும் தெரிவித்து தனது செயலுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.