
திமுக சார்பில் தென் மாவட்டங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அழகிரி. கட்சியில் ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு அழகிரி ஒதுக்கப்பட்டார்.
இதையடுத்து கட்சி நடவடிக்கைகளில் முன்புபோல் மிக தீவிரமாக செயல்படாமல் இருக்கிறார் அழகிரி. திமுகவிற்கு தற்போது ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்நிலையில், திரைப்படங்களில் நடித்துவரும் ஸ்டாலினின் மகன் உதயநிதியும் அண்மைக்காலமாக அரசியலில் திமுக சார்பில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி, இனிமேல் இதுபோன்ற மேடைகளில் தன்னை பார்க்கலாம் என தெரிவித்தார். உதயநிதியின் திடீர் அரசியல் பிரவேசம் கட்சியில் இருக்கும் சில சீனியர்களுக்கே அதிருப்தியையும் கட்சிக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில் நடந்த திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் அழகிரி கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அழகிரியிடம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் குறித்தி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அழகிரி, அரசியல் ஒரு சாக்கடை. இதில் யார் வந்தால் என்ன? என தெரிவித்தார்.